அபராதத் தொகை 10 மடங்கு;சிறைத்தண்டனையும் அதிகரிப்பு

சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தம்;

சுற்றுச் சூழல் சட்டத்திருத்தத்தினூடாக தற்பொழுது விதிக்கப்படும் அபராதங்கள் பத்து மடங்காக அதிகரிக்கப்படவிருப்பதுடன் சிறைவாச காலமும் நீடிக்கப்பட இருப்பதாக சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்று (04) சந்தித்து, அவர்களிடம் ஆசீர்வாதம் பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

தற்பொழுது நாட்டில பாரிய சுற்றுச் சூழல் சேதம் ஏற்படுவதாகவும் அது அரசாங்கத்தின் அனுசரணையில் இடம்பெறுவதாகவும் சில சமூக ஊடகங்கள் தவறான  பிரசாரங்களை பரப்புகின்றன.அது தொடர்பாக பீடாதிபதிகளுக்கு உண்மை விபரங்களை தெளிவு படுத்தும் வகையில் பீடாதிபதிகளை சந்தித்ததாக தெரிவித்த அமைச்சர்,

சுற்றுச் சூழல் தொடர்பில் புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபரிடம் பரிந்துரைக்கப்படும் என்றும் திருத்தப்பட்ட மசோதா விரைவில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்படவிருப்பதாகவும் தெரிவித்தார். அவை இந்த ஆண்டு இறுதிக்குள் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில், அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் தவறு செய்தபோது, சாதாரண மக்கள் பிடிபட்டு சிறிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டனர். இப்போது அதற்கு இடமில்லை. ஆனைவிழுந்தாவ பகுதியில் சேதமாக்கப்பட்ட 1 1/2 ஏக்கர் நிலத்தை புனரமைக்கவும், அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

வணாத்திவில்லு சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான நிலத்தில் பல மரங்கள் வெட்டப்பட்டிருப்பதாகவும், அதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.

 எம்.ஏ அமீனுல்லா

Mon, 10/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை