சமூகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க அரசு துரித நடவடிக்கை

திவுலபிட்டியவில் தாய், மகளுக்கு கொரோனா தொற்று

கம்பஹா மாவட்டத்தில் 7 கிராமங்கள் முடக்கம்

நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள் பூட்டு

 

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணொருவர் நேற்றைய தினம் திவுலப்பிட்டிய பகுதியில் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவருடன் தொர்புடைய 400பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

திவுலபிட்டிய காதூவப் பகுதியில் இயங்கும் தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த பெண்ணுக்கே வைரஸ் தொற்று நேற்றுக் காலை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 400 பேர் பணி புரிந்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை அதனை அண்டிய ஏழு கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து எவரும் வெளியில் செல்லவோ, உட்பிரவேசிப்பதற்கோ தடைசெய்யப்பட்டுள்ளது என இராணுவத் தளபதி சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க திவுலபிட்டிய, வெவகெதர, பெம்முன்ன, ஹொரகஸ்முல்ல, ஹபுவலான, ஹேன்பிட்டிகெதர மற்றும் கங்ஹின் முல்ல ஆகிய கிராமங்களே தனிமைப்படுத்தலுக்காக மூடக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

திவுலபிடிய மற்றும் மினுவங்கொடை பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி பெண்ணின் 16 வயது மகளுக்கு கொரோனா தொற்றியிருப்பது பீசீஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர பயணம் செய்த பஸ் வண்டியில் பயணித்த 40 பேரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

திவுலபிட்டிய பகுதி பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,395 ஆக அதிகரித்துள்ளது.

மேற்படி பெண் சுகவீனம் காரணமாக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்துள்ள

நிலையில் அவர் குணமாகி வைத்தியசாலையிலிருந்து வெளியேறும் போது மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போதே அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க கம்பஹா வைத்தியசாலையில் பணிபுரியும் 15 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளுக்கு விடுமுறை

இச் சம்பவத்தையடுத்து நேற்றுக்காலை கம்பஹா மாவட்டம் முழுவதுக்கும் பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டதுடன் அதனை அடுத்து நேற்று முற்பகல் நாடுமுழுவதிலுமுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 9ம் திகதி 2ம் தவணைக்கான பாடசாலை விடுமுறைகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தபோதும், நேற்றைய தினம் திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை ஏற்பட்டதால் பாடசாலைகளுக்கான விடுமுறை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க இன்று 5ம் திகதி முதல் நாடளாவிய அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் பிரிவேனாக்கள், தனியார் வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை திவுலபிட்டிய மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலை அறிக்கை

மேற்படி பெண்மணி பணிபுரிந்த யக்காதுவயில் அமைந்துள்ள ப்ரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை நேற்றைய தினம் விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தது.

சுகாதார துறை அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்பு கிடைத்தமையால் வைரஸ் தொற்றிய பெண்மணியை ஆரம்பக்கட்டத்திலேயே இனம் காண்பதற்கு முடிந்துள்ளது.

அதற்கிணங்க அந்தப் பெண்மணி தேசிய காய்ச்சல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க சம்பந்தப்பட் அதிகாரிகளின் பணிப்புரைகளுக்கு இணங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் உச்சளவு ஒத்துழைப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு தொடர்ந்தும் செயற்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆடைத்தொழிற்சாலை தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் அந்நிறுவனத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேற்படி வைரஸ் தொற்று நோயாளி இனங் காணப்பட்டதையடுத்து திவுலப்பிட்டிய பகுதியில் 180 பேரும் மற்றும் மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 250 பேருமாக 430 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் களனி பல்கலைக்கழகம்,நய்வல உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் மற்றும் யக்கலையிலுள்ள விக்ரமாரச்சிஆயுர்வேத நிறுவனம் ஆகியவற்றையும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதேவேளை மகர மற்றும் நீர்கொழும்பு சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிடுவதற்கான அனுமதி இன்று முதல் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

அதேவேளை இன்றைய தினம் அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பொது மக்களுக்கான சந்திப்பு நிகழ்வு இடம்பெறாது என பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரங்களில் பொதுமக்கள் சந்திப்பு இடம் பெறுவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அமைச்சு நேற்று தெரிவித்தது.

கொரோனா தோற்று காரணமாக மார்ச் மாதம் முதல் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டு கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொண்டது.சமூகத்தில் இருந்து கொரோனா தொற்று பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலே திவுலபிட்டிய பகுதியில் இருந்து நோயாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஏனைய பகுதிகளுக்கும் இது பரவாமல் தடுக்க அரசாங்கம் தேவையான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 10/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை