வடக்கில் பூரண கதவடைப்பு ஹர்த்தாலுக்கு மக்கள் ஒத்துழைப்பு

திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதிக்காமை மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் நேற்று பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தின் மட்டகளப்பு  மாவட்டத்திலும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.

திலீபனை நினைவுகூருவதற்கு எதிராக யாழ்ப்பாண பொலிசார் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்ற நிலையில், அஞ்சலி நிகழ்வுக்கு அனுமதி வழங்குமாறு கோரி தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தனர். இக் கட்சிகளின் கோரிக்கைக்கு பதில் கிடைக்காத நிலையில் மீண்டும் யாழில் கூடிய தமிழ் தேசிய கட்சிகள் இச் செயற்பாட்டுக்கு எதிராக யாழில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதெனவும் வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தாலை மேற்கொள்வதெனவும் தீர்மானித்திருந்திருந்தன.

இந்நிலையில் சனிக்கிழமை தொண்டைமனாறு ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த தீர்மானித்திருந்த நிலையில் அதற்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. அதனையடுத்து சாவகச்சேரியில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

அதேபோன்று வடக்கு, கிழக்கு ரீதியில் நேற்று பூரண ஹர்த்தாலுக்கு அழைப்புவிடுத்திருந்த நிலையில் வடக்கில் அனைத்து தரப்பினரும் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்கியிருந்தனர். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் பூரண ஆதரவு வழங்கியிருந்தனர்.

குறிப்பாக வடக்கில் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கியிருந்ததுடன், யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தது. அத்துடன் பொது அமைப்புகள் பலவும் தமது ஆதரவை வழங்கியிருந்தன.

 

யாழ்ப்பாணத்தில்....

யாழ்ப்பாணத்தில் சகல இடங்களிலும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. மாவட்டத்தின் பிரதான சந்தைகள், யாழ்.நகரப் பகுதி, பாடசாலைகள், அரச அலுவலகங்களென அனைத்தும் முடக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன.

நீதிமன்றங்கள் இயங்கிய போதும் அங்கு சட்டத்தரணிகள் வருகை தரவில்லை. இதனால் வழக்கு நடவடிக்கைகள் பாதிப்படைந்தன. அதேபோன்று அரச அலுவலகங்கள் இயங்கிய போதும் பொது மக்கள் யாரும் வருகை தந்திருக்கவில்லை.

இவை தவிர அனைத்து வர்த்தக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் பூட்டிய நிலையிலேயே காணப்பட்டன. பொது போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபையினர் ஈடுபட்டிருந்த போதும் பொது மக்கள் பெரியளவில் ஈடுபட்டிருக்கவில்லை. இதனால் யாழில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியிருந்தது.

 

வவுனியாவில்...

வவுனியாவிலும் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. வியாபார நிலையங்கள், சந்தைத் தொகுதிகள் அனைத்தும் பூட்டிய நிலையிலேயே காணப்பட்டன. பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகக் குறைவாகவே காணப்பட்டன.

 

முல்லைத்தீவில்...

முல்லைத்தீவிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடக்கப்பட்டிருந்தது. பொது போக்குவரத்தில் அரச, தனியார் பஸ் சேவைகள் ஈடுபட்டிருந்த போதும் பொது மக்கள் யாரும் போக்குவரத்தில் ஈடுபட்டிருக்கவில்லை.

அதேபோன்று சந்தைகள், வியாபார நிலையங்கள், பொது இடங்கள் அனைத்தும் பூட்டிய நிலையில் வெறிச்சோடி காணப்பட்டதுடன் நீதிமன்றங்கள் இயங்கிய போதும் சட்டத்தரணிகள் யாரும் சென்றிருக்கவில்லை.

 

மன்னாரில்...

மன்னாரில் மக்களின் முழுமையாக பாதிக்கப்படாத நிலையே காணப்பட்டது.

வியாபார நிலையங்கள் மாத்திரமே முடப்பட்டிருந்ததுடன் அரச தனியார் நிறுவனங்கள் வழமை போன்று இயங்கியிருந்தன.

பொதுப் போக்குவரத்தும் வழமை போன்று காணப்பட்டதுடன், அரச நிறுவனங்கள், பாடசாலைகள் இயங்கியிருந்தன. எனினும் மக்களினதும் மாணவர்களினதும் வரவு மிகக் குறைவாகக் காணப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.

 

கிளிநொச்சியில்...

கிளிநொச்சி மாவட்டத்தில் முழுமையான ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது. வியாபார நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் முற்றாக முடங்கியிருந்ததுடன், பொதுப் போக்குவரத்தின் தனியார் துறையினர் ஈடுபட்டிருக்கவில்லை.

 

கிழக்கு மாகாணம்...

கிழக்கு மாகாணத்தில் முழுமையாக ஹர்த்தாலுக்கு மக்கள் ஆதரவு வழங்கியிருக்கவில்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் ஆதரவு வழங்கியிருந்த போதும் ஏனைய மாவட்டங்களான அம்பாறை மற்றும் திருகோணமலையில் வழமைபோன்றே மக்களின் இயல்பு வாழ்க்கை காணப்பட்டது.

 

ஹர்த்தாலுக்கு எதிராகவும்

ஆர்ப்பாட்டம்...

இதேவேளை ஹர்த்தாலுக்கு எதிராக கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இப் போராட்டம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு வாழச்சேனைப் பகுதியில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

வியாபார நிலையங்களை

திறக்க பொலிஸார் வற்புறுத்தல்...

 

வடக்கில் பூட்டியிருந்த வியாபார நிலையங்களை திறக்குமாறு பொலிசார் அச்சுறுத்தியுள்ளனர். குறிப்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் பூட்டியிருந்த வியாபார நிலையங்களில் காணப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்ட பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்கள் வியாபார நிலையங்களை திறக்க கூறி அச்சுறுத்தியுள்ளனர்.

 

பாதுகாப்பு அதிகரிப்பு...

வழமைக்கு மாறாக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு வடக்கில் அதிகரிக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

நமது வடக்கு நிருபர்கள்

Tue, 09/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை