பெலாருஸ் எதிர்க்கட்சித் தலைவர் நாட்டு எல்லையில் வைத்து கைது

பெலாருஸ் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொலஸ்னிகோவா காணாமல் போய் ஒரு தினத்தின் பின் அந்நாட்டு எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுக் காலை அவர் கைது செய்யப்பட்டதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தலைநகர் மின்ஸ்கில் முகமூடி அணிந்தவர்களால் அவர் மினிபஸ் ஒன்றில் கடத்திச் செல்லப்படுவதை கண்டதாக ஒருவர் கூறி ஒரு தினத்தின் பின்னரே இந்த கைது இடம்பெற்றுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி அலெக்சான்டர் லுகசென்கோவை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்தவர்களில் ஒருவராக கொலஸ்னிகோவா உள்ளார்.

லுகசென்கோ வெற்றியீட்டிய அந்தத் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. தொடர்ச்சியாக நான்காவது வார இறுதியில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 600க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

1994 ஆம் ஆண்டு தொடக்கம் பெலாரஸில் ஆட்சியில் உள்ள லுகசென்கோ, மேற்கத்தேய சக்திகள் தமது நாட்டில் தலையிடுவதாக குற்றம்சாட்டி வருகிறார்.

Wed, 09/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை