கொவிட்-19: உலகம் இதுவரை காணாத உணவு பற்றாக்குறை பற்றி எச்சரிக்கை

கொவிட்-19வைரஸ் பரவலால் உலகமே இதுவரை இல்லாத அளவில் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளது.

வைரஸ் தொற்றை விட அதனால் ஏற்படும் உணவுத் தட்டுப்பாட்டினால் அதிகம் பேர் பலியாவர் என எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன. 2020இல் முன்னர் எதிர்வுகூறப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக 132மில்லியன் பேர் பாதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வேறு எந்தக் காலத்திலும் இவ்வாறு அதிகரித்ததில்லை என்றும் கூறப்படுகிறது.

உணவு விநியோக ஓட்டத்தைக் கெடுத்து உலக நாடுகளின் பொருளாதாரத்தை நாசப்படுத்தும் இந்த வைரஸ் பரவலால் பொருட்களை வாங்குவதற்கான மக்களின் ஆற்றல் மெல்லத் தேய்ந்து வருகிறது. 

உணவு உற்பத்தி நிலையாக இருக்கும் நாடுகளில் தற்போதைய சூழலில் நிச்சயமின்மை நிலவுகிறது. வளர்ந்த நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள் என்ற வரையறைகளும் இதற்கு பொருந்தாதுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க்கின் குவீன்ஸ் வட்டாரத்தில் உணவு வங்கியைச் சுற்றி வளைந்து செல்லும் வரிசையில் பலர் எட்டு மணி நேரத்திற்கு மேல் கால்கடுக்க  நிற்பது வழக்கமாகிவிட்டதாக புளூம்பர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் பழங்கள் பறிக்கப்படாமல் மரங்களிலேயே  மக்கிப் போகின்றன.

ஆபிரிக்காவிலுள்ள உகண்டாவில் வாழைப்பழங்களும் தக்காளிப்பழங்களும் திறந்த சந்தைகளில் விற்கப்படாமல் வெட்ட வெளியில் காய்கின்றன.  கப்பல்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளால்   அரிசி மற்றும் இறைச்சி வகைகள் நிறைந்துள்ள கலன்கள் பல்வேறு துறைமுகங்களுக்கு அருகிலுள்ள தண்ணீர் மீது மிதக்கின்றன.

 “இந்த நெருக்கடியின் வடுக்கள் இனி வரும் பல தலைமுறையினருக்கும் தென்படும்” என்று டிரெக்ஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் மரியானா சில்ட்டன் புளூம்பர்க் நிறுவனத்திடம் தெரிவித்தார். “2120ஆம் ஆண்டிலும் இந்த நெருக்கடி பற்றி தொடர்ந்து பேசப்படும்,” என்று அவர் கூறினார்.

உலகிலுள்ள மிகப்பெரிய ஏற்ற தாழ்வுகளை இந்நோய்ப்பரவல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மில்லியன் கணக்கானோர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். அரசாங்கம் கோடிக்கணக்கில் நிதியுதவி வழங்கினாலும் பலரது குடும்பங்களின் வீட்டடுப்புகள் புகைவதில்லை. இவ்வாண்டின் இறுதிக்குள் நாளுக்கு 12,000 பேர் வரை கொவிட்-19 தொடர்பான உணவுப் பற்றாக்குறையினால் இறக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் 78 வீதத்தினருக்கு சத்துள்ள உணவை வாங்குவதற்கான பணம் இல்லை. இந்த எண்ணிக்கை வைரஸ் பரவலால் மேலும் மோசமாகவுள்ளது.

Wed, 09/02/2020 - 08:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை