இஸ்ரேல்-காசா பதற்றத்தை தணிக்க இருதரப்பு உடன்பாடு

இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் கடந்த சில வாரங்களாக இடம்பெற்ற பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர பலஸ்தீன போராட்டக் குழுக்கள் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டதாக காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கட்டார் தூதுக் குழு ஒன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையின் கீழ் இஸ்ரேல் மீது தீமூட்டக் கூடிய பலூன்களை விடுவதை நிறுத்த ஹமாஸ் இணங்கி இருப்பதோடு இஸ்ரேல் வான் தாக்குதல்களை நிறுத்த உடன்பட்டதாக பலஸ்தீன அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதனை இஸ்ரேலிய தரப்பும் உறுதி செய்துள்ளது. இதன்படி காசாவுக்கான எல்லைக் கடவை திறக்கப்படவிருப்பதோடு காசா மீனவர்கள் 15கடல் மைல்கள் வரை செல்ல அனுமதிக்கப்படவுள்ளனர்.

பலஸ்தீன பகுதிகளுடன் தொடர்புபட்ட இஸ்ரேல் நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “தொடர் அமைதி மற்றும் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் ஹமாஸ் இதனை செயற்படுத்த தவறினால் அதற்கமைய இஸ்ரேல் செயற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காசா பகுதி மீதான 13ஆண்டு முடக்க நிலையை தளர்த்தும் அழுத்தமாகவே பலஸ்தீனர்கள் இஸ்ரேலை நோக்கி தீமூட்டக்கூடிய பலூன்களை பறக்க விடுவதை பார்க்க முடிகிறது. எனினும் இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீதான முற்றுகையை மேலும் இறுக்கி வருகிறது.

2007ஆம் ஆண்டு காசாவில் ஹமாஸ் ஆட்சிக்கு வந்ததை அடுத்தே காசா மீது இஸ்ரேல் மற்றும் எகிப்து முற்றுகை ஒன்றை ஆரம்பித்தது. ஹமாஸின் ஆயுத பலத்தை தடுக்க இந்த முற்றுகை அவசியம் என்று இஸ்ரேல் குறிப்பிட்டபோதும் இது ஒரு கூட்டுத் தண்டனை என்று பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.   

காசாவில் முற்றுகை அமுல்படுத்தப்பட்டது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மூன்று போர்கள் இடம்பெற்றிருப்பதோடு சிறு சிறு சண்டைகள் அடிக்கடி நிகழ்கின்றன.

இந்தப் முற்றுகை காசா பொருளாதாரத்தை சீரழித்திருப்பதோடு அங்குள்ள மக்கள் தொகையில் பாதி அளவானவர்கள் வேலையின்றி உள்ளனர். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் அந்த பகுதியில் சுகாதாரக் கட்டமைப்பும் பலவீனமடைந்து காணப்படுகிறது.

Wed, 09/02/2020 - 08:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை