அலி சப்ரியின் நியமனம் முஸ்லிம் சமூகத்திற்கு கிடைத்த கௌரவம்

கட்சி பேதமின்றி பலரும் பாராட்டு

 

நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டது முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட கௌரவமென முஸ்லிம் தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரவையில் குரல் கொடுப்பதற்கு பொருத்தமான ஒருவர் நியமிக்கப்பட்டது நிம்மதி தரும் விடயம் எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.  

புதிய அமைச்சரவையில் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் எம்.பியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டது குறித்து முஸ்லிம் சமூகம் பெரும் நிம்மதி கொள்ளலாம். அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் இல்லாதிருந்தால் சமூகத்தின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும். முஸ்லிம் சமூகத்தின் சகல பிரச்சினைகளுக்கும் அவரிடமிருந்து எதிர்பார்ப்பது தவறு. சகல பிரச்சினைகளையும் அவரின் தலையில் இட்டு பெரிதாக எதிர்பார்க்காது அவருக்கு உறுதுணையாக செயற்பட சிவில் சமூகம் முன்வர ​வேண்டும். ஜனாதிபதிக்கு மிக நெருக்கமானவர் என்ற வகையில் அவரின் நியமனம் திருப்தி அளிக்கக் கூடியது.  முஸ்லிம் சமூகத்தை போன்றே ஏனைய சமூகங்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. எனவே எமது சமூகத்திற்கான தீர்வுகளை மாத்திரம் அவரிடம் எதிர்பார்ப்பது தவறானது. சிங்கள சமூகம் திருப்தியாக இருந்தால் எமது சமூகம் திருப்தியாக இருக்கும். எனவே அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டதை பெரிதும் வரவேற்கிறேன் என்றார்.  

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ்  

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் கருத்துத் தெரிவிக்கையில்,

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்பட்டதை வரவேற்கிறேன். அவருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். இந்த நகர்வு வரவேற்கத்தக்கது. ஏனைய விடயங்களிலும் அரசாங்கம் இவ்வாறான முன்னெடுப்புகளை செய்வது உகந்தது என்றார்.  

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் கூறுகையில்,  

அலி சப்ரி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்பட்டது முஸ்லிம் சமூகத்திற்கு ஜனாதிபதியும் பிரதமரும் வழங்கிய கௌரவமாகும்.இதற்கு முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.  (பா)  

ஷம்ஸ் பாஹிம்   

Thu, 08/13/2020 - 09:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை