ஐக்கிய அரபு இராச்சியம் பயணிக்க இஸ்ரேலின் தூதுக் குழு ஏற்பாடு

அமெரிக்க அதிகாரிகளுடன் இஸ்ரேலிய தூதுக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய அரபு இராச்சியம் பயணிக்கவிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்தப் பயணம் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையிலான முதல் வர்த்தக விமானப் பயணமாகவும் அமையவுள்ளது.  

தவிர, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையே இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் உடன்படிக்கை பற்றி கடந்த ஓகஸ்ட் 13ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு விடுத்த பின் இரு தரப்புக்கும் இடையிலான முதலாவது உயர்மட்ட சந்திப்பாகவும் இது அமையவுள்ளது.  

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையிலான உடன்படிக்கையில் தூதரகங்கள் திறப்பது, வர்த்தக மற்றும் பயணத் தொடர்புகள் பற்றி இன்னும் பேச்சுவார்த்தை இடம்பெறவேண்டி உள்ளது. எனினும் இதனை பலஸ்தீனர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.  

இதன்படி இஸ்ரேல் தூதுக்குழு இஸ்ரேல் ஏர்லைன்ஸ் விமானத்தில் டெல் அவிவில் இருந்து அபூ தாபிக்கு நேரடியாக பயணிக்கவுள்ளது. இதன்போது விமானப் போக்குவரத்து, சுற்றுலா, வர்த்தகம், நிதி, சுகாதாரம், ஆற்றல் மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு இராச்சித்திற்கு இடையிலான ஒத்துழைப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக நெதன்யாகு தெரிவித்தார்.  

எகிப்து மற்றும் ஜோர்தானுக்கு அடுத்து இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்தும் மூன்றாவது அரபு நாடாக ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 08/27/2020 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை