ஆப்கானில் திடீர் வெள்ளம்: வீடுகள் சேதம்: 70 பேர் பலி

ஆப்கான் தலைநகர் காபுலின் வடக்காக உள்ள நகர் ஒன்றில் பெய்த கனமழையை அடுத்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்திருப்பதோடு குறைந்தது 70பேர் உயிரிழந்துள்ளனர்.  

பர்வான் மாகாணத் தலைநகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் இடிந்த கட்டடங்களில் சிக்கியிருப்பவர்களை காப்பற்றும் மீட்புப் பணிகள் நேற்று இடம்பெற்றன.  

“எமது அண்டை வீட்டில் இருக்கும் இரண்டு குடும்பங்கள் இன்னமும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்” என்று சரிகார் குடியிருப்பாளர் ஒருவர் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் குறிப்பிட்டார். அவர்களை மீட்க இன்னும் மீட்புப் பணியாளர்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் குறைந்தது 70பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுமார் 80பேர் காயமடைந்திருப்பதாகவும் பொது சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பலர் சிறுவர்களாவர். 

சேற்றினால் நிரம்பிய வீதிகளில் கார்கள் மற்றும் வாகனங்கள் முழ்கியிருக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ஆப்கானின் ஏனைய நகரங்களிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டிருந்தபோதும் உயிர்ச் சேதங்கள் பதிவாகவில்லை.  

கோடை காலங்களில், பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான மழைப் பெய்வதால் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாத ஆரம்பத்தில் கிழக்கு மாகாணமான நன்கர்ஹாரில் கிராமம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 15சிறுவர்கள் உட்பட 16பேர் உயிரிழந்ததோடு பல வீடுகளும் அழிந்தன.    

 

Thu, 08/27/2020 - 10:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை