புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி வினைத்திறன் மிக்க தபால் சேவை

ஐந்தாண்டுத் திட்டம் ஏற்பாடு - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளை போன்று இலங்கையிலும் வினைத்திறன் மிக்க தபால் சேவையை மாற்றியமைக்க நடவடிக்கையெடுக்கப்படும். அதற்காக புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி ஐந்தாண்டு திட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக தபால் சேவைகள், ஊடகத்துறை மற்றும் தொழில் விருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

கொழும்பு, மருதானையிலமைந்துள்ள தபால் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நேற்று தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட நாட்டை கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற எண்ணக்கருவுக்கமைய எமது பணிகள் முன்னெடுக்கப்படும். அதற்கான அமைச்சரவையையும் அவர் அமைத்துள்ளார். எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சும் பொறுப்புவாய்ந்த அமைச்சாகும்.

இலங்கையின் தபால்சேவையை உலகத் தரமிக்கதாக கட்டியெழுப்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளேன். புதிய தொழில்நுட்பங்கள் உள்வாங்கப்படும் என்பதுடன், தபால் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளவர்களின் அனுபவங்களையும் இதற்காக பெற்றுக்கொள்ளவும் உத்தேசித்துள்ளோம்.

அதற்காக ஐந்தாண்டு திட்டமொன்று வகுக்கப்படவுள்ளது. துறைக்கு பொறுப்பான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆதரவுடன் வினைத்திறன்மிக்க தபால் சேவையை நாட்டில் கட்டியெழுப்பி துரித கதியில் மக்களுக்கு தபால் சேவையை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்காகும் என்றார்.

 

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 08/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை