எனது அமைச்சு கடமைகள், பொறுப்புக்கள் குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லை

எவ்வாறு முன்னெடுக்கின்றேன் என பொறுத்திருந்து பாருங்கள்- ஜீவன்

தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு பிரதமரின் நேரடி பார்வையின் கீழ் காணப்படுவதனால் எனது அபிவிருத்தி பணிகளை தடையின்றி தயக்கமின்றி முன்னெடுப்பேன். எவரும் அச்சப்பட தேவையில்லையென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சில் நேற்றுக் காலை சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தற்போதைய புதிய அரசாங்கத்தில் வழங்கப்பட்டுள்ள அமைச்சு பொறுப்புகளை கண்காணிப்பதற்காக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் எனக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் நேரடி கண்காணிப்பில் உள்ளது.

ஆகையால் யார் குற்றம் சொன்னாலும் அச்சப்படத் தேவையில்லை. எனது அமைச்சின் கடமைகளை எவ்வாறு முன்னெடுக்கின்றேன் என்பதை பொருத்திருந்து பாருங்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் அதன் அணுகுமுறைகளை வெவ்வேறாக முன்னெடுத்து செல்கின்றது.

அந்தவகையில் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபாய் சம்பளம் விடயம் தொழிற்சங்க ரீதியாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதேநேரத்தில் இது தொடர்பாக நாட்டின் பிரதமருடைய கவனத்திற்கும் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளது. 1,000 ரூபாய் தொடர்பான பேச்சுவார்த்தை சற்று வித்தியாசமாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும்.

பெருந்தோட்டப் பகுதிகளில் அமைக்கப்படும் வீடமைப்பு ஆரம்ப காலத்தில் சொன்னதை போல் எழுத்தளவில் மாடி வீடாக இருந்தாலும், (சிலப்) முறையிலான வீடுகளே அமைக்கப்படும்.

ஆனால் இந்திய வீடமைப்பை வைத்துக் கொண்டு நாம் அரசியல் செய்யப்போவதில்லை. வீடமைப்பு தொடர்பில் முன்னெடுக்கும் பணிகளை நீங்கள் பொருத்திருந்து பார்க்க வேண்டும். ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியுடன் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இன்று கல்வி அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ் பதவியேற்றுள்ளார்.

அவரிடம் கலந்தாலோசித்துள்ளோம். ஆகையால் இன்னும் ஓரிரு வாரங்களில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என நம்பிக்கை உள்ளது. வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட மாணவர்களை உள்ளடக்கியே இத்தேசிய பல்கலைக்கழகம் அமையப்படும். அங்குள்ள இளைஞர்களையும் நாம் கவனிக்க கடமைப்பட்டுள்ளோம். இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன், தேர்தலில் போட்டியிட்ட இ.தொ.கா வேட்பாளர்கள், உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

ஹற்றன் சுழற்சி நிருபர்

 

Sat, 08/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை