ஜனாதிபதி தேர்தல் முடிவை எதிர்த்து பெலாரஸில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம்

பெலாரஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகஷென்கோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

தலைநகர் மின்ஸ்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இரவு தோறும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தொடர்ந்து 4ஆவது நாளாக கடந்த புதன்கிழமை இரவும் போராட்டம் நடைபெற்றது.

மின்ஸ்க் நகரின் முக்கிய இடங்களில் பெரும் எண்ணிக்கையானோர் மனிதச் சங்கிலி அமைத்து, தேர்தலில் ஜனாதிபதி லுகஷென்கோ மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள், தங்களது வாகனங்களின் ஒலிப்பான்களை தொடர்ந்து இயக்கி போராட்டக்காரர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். வீடுகளில் இருந்து கைகளைத் தட்டியும் பலர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அவர்களைக் கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையைக் கையாண்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. போராட்டக்காரர்களை நோக்கி இறப்பர் குண்டுகளால் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை பாதுகாப்புப் படையினர் கலைத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பிடித்து பாதுகாப்புப் படையினர் பலமாகத் தாக்கினர்.

மின்ஸ்க் மட்டுமன்றி, பெலாரஸின் பல்வேறு நகரங்களிலும் இத்தகைய போராட்டங்கள் நடைபெற்றன. இதுவரை 6,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தனர். இத்தனை அதிகம் பேர் கைது செய்யப்பட்ட நிலையிலும், சிறிதும் தீவிரம் தணியாமல் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோவியட் ஒன்றியத்தில் இருந்து பெலாரஸ் பிரிந்தது முதல் அந்த நாட்டை 26 ஆண்டுகளாக ஆண்டு வரும் சர்வாதிகார ஆட்சியாளர் அலெக்ஸாண்டர் லுகஷென்கோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 80 வீத வாக்குகள் பெற்று மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட ஸ்வெட்லானா ஷிகானோஸ்கயாவுக்கு வெறும் 10 வீத வாக்குகளே கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து, இந்தத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதாக நடுநிலையாளர்களும், எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

Sat, 08/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை