துருக்கி–கிரேக்கம் பரஸ்பரம் ‘போர் ஒத்திகை’ அறிவிப்பு

கிரேக்க தீவான கிரீட்டுக்கு அப்பால் துருக்கி மற்றும் கிரேக்கம் பரஸ்பரம் கடற்படை பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளன.

கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிவாயு மற்றும் எண்ணைக்கு உரிமை கோரும் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பகுதியில் வேறு கப்பல்களை தவிர்த்துக்கொள்ளும்படி துருக்கி உத்தியோகபூர்வ எச்சரிக்கையை விடுத்துள்ளது. நில அதிர்வு ஆராய்ச்சி கப்பலின் செயற்பாட்டை நீடிப்பதாக துருக்கி அறிவித்திருக்கும் நிலையிலேயே கிரேக்கம் இங்கு போர் ஒத்திகை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இரு தரப்புக்கும் இடையிலான பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ், துருக்கி மற்றும் கிரேக்கத்திற்கு பயணத்தை ஆரம்பித்துள்ளார். கிரீட் கடலுக்கு அப்பால் மற்றும் சர்ச்சைக்குரிய சைப்ரஸ் கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் இரு நேட்டோ அங்கத்துவ நாடுகளான துருக்கி மற்றும் கிரேக்கத்திற்கு இடையே இழுபறி ஏற்பட்டுள்ளது.

தவிர, கருங்கடலில் பெருமளவு இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக துருக்கி கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 08/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை