அமெரிக்காவில் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

அமெரிக்காவில் கறுப்பின ஆடவர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானது தொடர்பில் கெனோசா நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.  

விஸ்கொன்சினின் கெனோசாவில் துப்பாக்கிச் சூட்டு சத்தத்துடன் வீதிகள் எங்கும் மக்கள் ஓடுவது மற்றும் காயமடைந்த ஒருவர் நிலத்தில் படுத்திருக்கும் வீடியோ இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.  

பொலிஸாரினால் நெருங்கிய தூரத்தில் இருந்து ஜகப் பிளக் என்ற கறுப்பினத்தவர் பின்புறமாக ஏழு தடவைகள் சுடப்பட்ட சம்பவத்தை அடுத்து தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.  

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து தமது சொத்துகளை பாதுகாக்கவெனக் கூறி வெள்ளையினத்தவர்களை பிரதானமாகக் கொண்ட குழு ஒன்று ஆயுதங்களுடன் வீதியில் ஒன்று திரண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.  

இந்நிலையில் இந்த ஆயுதக் குழுவுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலிலேயே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதா என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. 

அமெரிக்க பொலிஸார் ஆபிரிக்க அமெரிக்கர்களின் மீது தேவையின்றி அபாயகரமான உத்திகளைப் பயன்படுத்துகிறது என்று நீண்ட காலமாக நிலவி வரும் குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த சம்பவம் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 

3 மாதங்களுக்கு முன் மினியாபோலிஸில் பொலிஸார் கட்டுப்பாட்டில் இருந்த ஜார்ஜ் பிளொய்டுக்கு நிகழ்ந்த மரணம் அமெரிக்கா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.    

Thu, 08/27/2020 - 09:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை