ஈரான் மீதான தடை: அமெரிக்காவின் முயற்சியை பாதுகாப்பு சபை நிராகரிப்பு

ஈரான் மீதான சர்வதேச தடைகளை மீண்டும் கொண்டுவரும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை தடுத்துள்ளது.  

மத்திய கிழக்கு தொடர்பில் வீடியோ கொன்பிரன்ஸ் மூலம் இடம்பெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில், அமெரிக்காவின் இந்தத் திட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று அது நிராகரிக்கப்படுவதற்கு காரணமாக கூறப்பட்டுள்ளது.  

2015ஆம் ஆண்டு இடம்பெற்ற அணுசக்தி உடன்படிக்கையின் விதிகளை கடைப்பிடிக்க ஈரான் தவறிவிட்டதாக குற்றம்சாட்டி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், அந்த நாட்டின் மீதான தடைகளை மீண்டும் கொண்டுவர பாதுகாப்புச் சபையை வலியுறுத்துகிறது.  

ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியேறிய அமெரிக்கா அந்த நாட்டின் மீது தடையை மீண்டும் கொண்டுவரும் சட்ட உரிமை பற்றி வாதாடி வருகிறது.  

எனினும் 15அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபையில் பதின்மூன்று நாடுகள் அமெரிக்காவின் திட்டத்தை நிராகரிக்கக் கோரி தற்போது தலைமையை ஏற்றிருக்கும் இந்தோனேசிய தூதுவருக்கு கடிதம் எழுதியுள்ளன.  

முன்னதாக வரும் ஒக்டோபரில் காலாவதியாக உள்ள ஈரான் மீதான ஆயுதத் தடையை நீடிப்பதற்கு பாதுகாப்புச் சபையில் கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு டொமினிக்கன் குடியரசு மாத்திரமே ஆதரவு வெளியிட்ட நிலையில் அந்தத் தீர்மானம் தோல்வியடைந்தது.    

Thu, 08/27/2020 - 09:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை