ஒக்டோபரில் தடுப்பூசி வழங்க ரஷ்யா திட்டம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை வரும் ஒக்டோபர் மாதத்தில் பொதுமக்களுக்கு வழங்க ரஷ்யா திட்டமிடுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் மிகாயில் முராஷ்கோ கூறியதாக ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு வழங்கப்படும் தடுப்பு மருந்து குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் மருத்துவர்கள், ஆசிரியர்களுக்குத்தான் முதலில் அந்தத் தடுப்பு மருந்து வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் அரசாங்க ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட அந்நாட்டின் முதல் கொவிட்–19 தடுப்பு மருந்துக்கு, அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியை ஓகஸ்ட் மாதத்தில் பெற்று, பின்ன மருத்துவப் பராமரிப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், ரஷ்யாவின் இந்த வேகமான நடவடிக்கை குறித்து சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

“ரஷ்யாவும் சீனாவும் தாங்கள் தயாரித்துள்ள மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்வதற்கு முன்பே, தடுப்பூசியை தயாரித்துவிட்டன” என்று தான் நம்புவதாக அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் டொக்டர் அந்தோனி பவுசி கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் பாதுகாப்பான மற்றும் திறன்மிக்க தடுப்பூசியை அமெரிக்கா உருவாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகள் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளன. தற்போது 20க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் உள்ளன.

Mon, 08/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை