அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்; ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பைடன் அதிகாரபூர்வமாக தேர்வு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

ஜனநாயகக் கட்சி மாநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்ட பைடனுக்கு அந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளின்டன் மற்றும் ஜிம்மி காட்டார், அதேபோன்று முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பொவல் ஆகியோரும் தமது ஆதரவை வெளியிட்டனர்.  

தற்போதைய ஜனாதிபதி டொனால் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக கிளின்டன் குறிப்பிட்டார்.  

இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி, மிஷெல் ஒபாமா, டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு மிகத் தவறான ஜனாதிபதி என்றார். தலைமை பண்பு, நிலையான போக்குகள் அற்றவர் என்றும், குழப்பங்களை விளைப்பவர் என்றும் சாடினார். 

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை விடவும் பைடன் முன்னிலையில் உள்ளார்.  

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடியோ உதவியுடன் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 50மாநிலங்கள் மற்றும் ஏழு பிராந்தியங்களின் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகளும் பைடனுக்கு தமது ஆதரவை வெளியிட்டனர்.  

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் டிரம்ப் உருவாக்கிய குழப்பங்களை சரிசெய்ய ஜோ பைடனுக்கு அனுபவமும் ஆற்றலும் இருப்பதாக ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

77வயதான பைடன் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். 1988மற்றும் 2008ஆம் ஆண்டுகளிலும் அந்தப் பதவிக்காக போட்டியிட்டபோதும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நியமிக்கப்படுவது இது முதல் முறையாகும்.  

இதற்கு முன்னர் பராக் ஒபாமா அரசில் பைடல் துணை ஜனாதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இது குறித்து ட்விட் செய்துள்ள அவர், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது தமது வாழ்நாளில் கிடைத்துள்ள மிகப்பெரிய கெளரவம் என குறிப்பிட்டுள்ளார். அவருடன் துணை ஜனாதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளியினரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.   

Thu, 08/20/2020 - 11:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை