டிக்டொக்கிற்கு தடை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கையொப்பம்

சீனாவின் இரு மிகப்பெரிய செயலிகளான டிக் டொக் மற்றும் விசாட் செயலிகளை இலக்கு வைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த உத்தரவின் கீழ் குறித்த நிறுவனங்களுடனான வர்த்தகங்களை அமெரிக்க நிறுவனங்கள் 45 நாட்களுக்குள் நிறுத்தும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச தொழில்நுட்பம் தொடர்பில் சீனாவின் செல்வாக்குடனான அமெரிக்காவின் மோதல் போக்கின் முக்கிய நடவடிக்கையாக இது உள்ளது.

டிக் டொக்கின் அமெரிக்க செயற்பாட்டை மைக்ரோசொப் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி இறுதிக் கெடுவாக டிரம்ப் விதித்திருக்கும் நிலையிலேயே இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் சீனாவுக்கு எதிராக டிரம்ப் நீர்வாகம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே பைட்டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாக வீடியோ பகிர்வு தளமான டிக் டொக் மற்றும் டென்சன்ட் கொங்லோமெரட் நிறுவனத்திற்கு சொந்தமான குறுஞ்செய்தி சேவை தளமான விசாட் இலக்கு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டிக்டொக், விசாட் செயலிகள் இரண்டும் சீனாவுக்குச் சாதகமாக தவறான தகவல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குறைகூறினார்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பை முன்னிட்டு தாம் அவற்றின் மீது நடவடிக்கை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார். எனினும் இந்த இரு நிறுவனங்களும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துவருகின்றன.

 

Sat, 08/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை