சுமார் 807 கி.கி. மஞ்சளுடன் நால்வர் கைது

சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 807 கிலோகிராமிற்கும் அதிகளவான உலர்ந்த மஞ்சள்,  நுரைச்சோலை, தலுவ பிரதேசத்திலும் மன்னார், வங்காலை பிரதேசத்திலும் கடற்படையினரால் நேற்று (18) கைப்பற்றப்பட்டுள்ளதோடு, நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல் வழியாக தேவையற்ற நபர்கள் நுழைவதையும், சட்டவிரோத பொருட்கள் கொண்டு வரப்படுவதையும் தடுக்கும் வகையில், நாட்டைச் சூழவுள்ள கடற்கரை பிரதேசங்களில் கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கமைய, வடமேல் கடற்படை கட்டளை பிரிவினருடன் இணைக்கப்பட்ட கடற்படையினரால் நுரைச்சோலை, தலுவ கடற்கரையில் முன்னெடுக்கப்பட்ட  ரோந்து நடவடிக்கையின்போது, சட்டவிரோதமான முறையில் 02 டிங்கி படகுகளில் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட 14 சாக்குகளில் சுமார் 700 கிலோகிராம் மஞ்சளுடன், கற்பிட்டியைச் சேர்ந்த 25, 58 வயதுடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வடமத்திய கடற்படை கட்டளை பிரிவினருடன் இணைக்கப்பட்ட கடற்படையினரால் மன்னார், வங்காலை கடற்கரை பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது, கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த 02 சாக்குகளை சோதனையிட்டதில், சுமார் 107 கிலோகிராம் ஈர மஞ்சள்  கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 03 வார காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட சுமார் 8,245 கிலோகிராம் மஞ்சள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

நுரைச்சோலை, தலுவவிலும் மன்னார், வங்காலையிலும் கைப்பற்றப்பட்ட மஞ்சள், டிங்கி படகுகளுடன் சந்தேகநபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சின்னப்பாடு மற்றும் யாழ்ப்பாண சுங்க காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

Wed, 08/19/2020 - 13:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை