இனவாத செயற்பாடுகளில் ராஜபக்ச குடும்பம் ஈடுபட்டதாக வரலாறு இல்லை

பேருவளை முன்னாள் நகரபிதா மில்பர்

இனவாத செயற்பாடுகளில் ராஜபக்ச குடும்பம் ஒரு போதும் ஈடுபட்டதில்லை. அவர்கள் முஸ்லிம் நாடுகளுடன் மிகவும் நெருக்கமாகவும் சிறப்பாகவும் உறவுகளை முன்னெடுத்து வந்த காரணத்தினாலேயே பலஸ்தீனத்திலுள்ள வீதிக்கு பிரதமர் மஹிந்தவின் பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேருவளை முன்னாள் நகர பிதா மில்பர் கபூர் தெரிவித்தார்.

பேருவளை பொதுஜன பெரமுன முஸ்லிம் இளைஞர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட "Face to Face " நிகழ்வு  சீனன்கோட்டையிலுள்ள பொதுஜன பெரமுன அலுவலகத்தில் (15) இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டு மர்ஜான் பளீலுடனும் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கும் கைகோர்ப்பதாக உறுதி எடுத்துக் கொண்டமை விசேட அம்சமாகும்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய மில்பர் கபூர்,

இந்நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தை கௌரவப்படுத்திய பெருந்தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ச வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். எந்தத் தலைவரும் செய்யாத ஒரு சேவையை எமது சமூகத்திற்கு அவர் செய்தார். ஐவேளைத் தொழுகைக்கான அதானை தேசிய ஒலிபரப்புச் சேவையில் ஒலிபரப்புச் செய்து எமது சமூகத்தை கௌரவப்படுத்தினார். அதேபோல் எமது சமூகத்திற்கு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் மர்ஜான் பளீல் ஆகியோரை தேசிய பட்டியலில் உள்வாங்கி ஜனாதிபதியும் பிரதமரும் கௌரவமளித்துள்ளனர். அவர்கள் ஒருபோது இனவாதத்துக்கு துணைபோகக் கூடியவரல்லர்.

தர்கா நகர் சம்பவத்தை வைத்து ராஜபக்சவினரை வீண் பலி சுமத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய ராஜித்த, சம்பிக்க போன்ற இனவாதிகள் இன்று யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அதே கட்சியில் தான் எமது சமூகத்தை அடகு வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்ற ஹக்கீமும், ரிஷாத்தும் இருக்கிறார்கள். அன்றைய நல்லாட்சியில் கண்டி, திகன, அக்குரணை, காலி போன்ற இடங்களில் ஏற்பட்ட இனவாத செயற்பாடுகளின் போது பெருந்தொகை பெறுமதியான சொத்துகள் அழிக்கப்பட்டன. இது தொடர்பில் அன்றைய நல்லாட்சியிலிருந்த எமது 22 பாராளுமன்ற உறுப்பினர்களும் என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்பதனை சமூகத்துக்கு தெளிவுபடுத்தட்டும். முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் இந்த இனவாதிகளுக்கு கூஜா பிடிக்கின்ற தலைவர்களுக்கு இத்தேர்தலில் சிறந்த பாடம் புகட்ட வேண்டும்.

ஜனாதிபதி தலைமையிலான பொதுஜன பெரமுன அரசை ஏனைய சமூகங்கள் கூட ஆதரிக்க முன்வந்துள்ள இன்றைய நிலையில் எமது சமூகம் மாத்திரம் பிரிந்து நின்று எதனை சாதிக்க முடியும் என்பதனை முதலில் சிந்திக்க வேண்டும் என்றார்.

அஜ்வாத் பாஸி

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை