கொவிட்–19 மீளாய்வுக்காக உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டம்

கொவிட்–19 உலக சுகாதார அமைப்பினால் இதுவரை பிரகடனம் செய்யப்பட்ட மிகக் கடுமையான சுகாதார அவசர நிலையாக இருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் டொக்டர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மீளாய்வு ஒன்றுக்காக உலக சுகாதார அமைப்பின் அவசரக் குழுவை இந்த வாரம் கூட்ட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் எபோலா (இரு முறை), சிகா, போலியோ மற்றும் பன்றிக் காய்ச்சல் என ஐந்து முறை உலக சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி தொடக்கம் உலகெங்கும் 16 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 650,000க்கும் அதிகமான உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

“ஜனவரி 30 ஆம் திகதி சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலை ஒன்றை நான் பிரகடனம் செய்யும்போது, சீனாவுக்கு வெளியில் 100க்கும் குறைவான வைரஸ் தொற்றே இருந்ததோடு எந்த உயிரிழப்பும் பதிவாகி இருக்கவில்லை” என்று டெட்ரோஸ் தெரிவித்தார்.

“கொவிட்–19 எமது உலகை மாற்றிவிட்டது. அது மக்கள், சமூகங்கள் மற்றும் தேசங்களை ஒன்றிணைத்ததோடு அவர்களை தனிமைப்படுத்தியது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வைரஸுக்கு எதிராக போராட உலகம் கடும் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் எம்முன்னால் நீண்ட பயணம் ஒன்று உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Wed, 07/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை