கொரோனா தொற்றை முறியடித்த நாடுகளில் மீண்டும் வைரஸ் பரவல்

கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பின் சில நாடுகளில் மீண்டும் வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இத்தகைய நிலை ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே கூறியிருந்தது.

சில நாடுகள் அவசரப்பட்டுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருவதாக அது எச்சரித்தது. இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றால் முதலில் பாதிக்கப்பட்ட நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கில் மீண்டும் நோய்ப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் பீஜிங்கில் புதிய வைரஸ் தொற்றுக் குழுமம் கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டது.

இதுவரை சுமார் 140 வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் அந்தக் குழுமத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.

பீஜிங்கில் வைரஸ் பரவலை முறியடிக்கக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மொன்டினிக்ரோவில் கொவிட்-19 நோய் முழுமையாக முறியடிக்கப்பட்டுவிட்டது என்று கூறிய இரண்டே வாரங்களில் புதிதாக 9 வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தென் ஐரோப்பாவிலுள்ள மொன்டினிக்ரோ சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதற்காகக் கட்டுப்பாடுகளை அண்மையில் தளர்த்தியது.

வைரஸ் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதைக் கொண்டாடிய சில வாரங்களிலேயே தென் கொரியாவின் தலைநகரமான சோலில் மீண்டும் வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

மக்கள் அதிகமாக வசிக்கும் சோலில் வைரஸ் பரவல் மேலும் மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது.

மறுபுறம் மே மாதம் ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வாரம் மிக அதிகமான வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இவ்வாரம் மட்டும் தினமும் 40க்கும் மேற்பட்ட வைரஸ் பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அனைத்துச் சம்பவங்களும் ஒரே சமூகக் குழுமத்தைச் சேர்ந்தவை என நம்பப்படுகிறது.

தினமும் பதிவாகும் வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 50ஐத் தாண்டினால், ஊரடங்கு நடவடிக்கைகள் மீண்டும் நடப்புக்கு வரும் என்று ஜப்பானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை