தெற்குடனான தொடர்பு அலுவலகத்தை வட கொரியா வெடிக்க வைத்து தகர்ப்பு

வட கொரியா தமது எல்லையில் இருக்கும் தென் கொரியாவுடனான கூட்டு தொடர்பு அலுவலக கட்டடத்தை வெடிவைத்து தகர்த்திருப்பதாக தென் கொரியா நேற்று தெரிவித்தது.

தென் கொரியா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி வட கொரியா எச்சரித்து ஒரு சில மணி நேரத்திலேயே இது நிகழ்ந்துள்ளது. தகர்க்கப்பட்டிருக்கும் தளமானது இரு கொரியாக்களுக்கும் இடையிலான தொடர்பாடலுக்கு உதவியாக 2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் காரணமாக இந்த அலுவலகம் கடந்த ஜனவரி தொடக்கம் வெறிச்சோடிக் காணப்பட்டது. எனினும் வட கொரியாவில் இருந்து வெளியேறிய குழுக்கள் தென் கொரியாவில் இருந்து வடக்கிற்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை அனுப்பிய சம்பவங்கள் இரு நாட்டுக்கும் இடையில் அண்மைய வாரங்களில் முறுகலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடர்பு அலுவலகத்தை தகர்க்கப்போவதாக வட கொரியத் தலைவரின் சகோதரி கிம் யோ ஜொங் கடந்த வார இறுதியில் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி பி.ப. 2.49க்கு தொடர்பு அலுவலகத்தில் வெடிப்பு ஒன்று பதிவானதாக தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தென் கொரியாவில் இருந்து எல்லை கடந்து வட கொரிய எதிர்ப்பு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவது குறித்து வட கொரியா அண்மைய வாரங்களில் தொடர்ச்சியாக கண்டனத்தை வெளியிட்டு வந்தது.

வட கொரியாவில் இருந்து வெளியேறிய குழுக்கள் பலூன்கள் மூலம் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் யு.எஸ்.பி. கருவிகள் உட்பட வேறு பொருட்களை வட கொரியாவுக்கு தொடர்ச்சியாக அனுப்பி வருகிறது.

இந்நிலையில் தென் கொரியாவுடனான அனைத்துத் தொடர்புகளையும் நிறுத்துவதாக கடந்த வாரம் வட கொரியா அறிவித்தது. அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேச்சு வார்த்தை முட்டுப்பட்டுள்ள நிலையில், தென் கொரியா அதற்கு உதவவில்லை என்று வட கொரியா குறைகூறி வருகிறது. வட கொரியாவின் இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்காவுடன் இணைந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகத் தென் கொரிய இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை