கொவிட்-19: கட்டுப்பாடுகளை இறுக்குகிறது பீஜிங் நிர்வாகம்

சீனத் தலைநகர் பீஜிங்கில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் புதிய கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மேலும் பல பகுதிகளில் முடக்க நிலை கொண்டுவரப்பட்டிருப்பதோடு சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பீஜிங்கில் 100க்கும் அதிகமான புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பீஜிங்கில் கடந்த ஏழு வாரங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் மாத்திரமே வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நகரின் மொத்த விற்பனை சந்தை ஒன்றுடன் தொடர்புபட்டே புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

கடந்த திங்கட்கிழமை சுமார் 200 சோதனைத் தளங்களை நிறுவிய பீஜிங் நிர்வாகம் கடந்த மே இறுதி தொடக்கம் குறித்த சந்தைக்குச் சென்ற 200,000 பேர் வரை சோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

சந்தைக்கு நெருக்கமாக உள்ள 21 குடியிருப்பு வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. லியோனிங், ஹெபெய் மற்றும் சிசுன் ஆகிய மூன்று மாகாணங்களிலும் புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு அவை அனைத்தும் பீஜிங்குடன் தொடர்புபட்டுள்ளன.

 

 

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை