ஹஜ்ஜுக்கு பணம் செலுத்தியவர்கள் மீளப் பெற்றுக் கொள்ளுங்கள்

சவூதி அரேபியா அறிவித்துள்ளதாக மர்ஜான் பளீல் தகவல்

2020ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் கடமைக்கு வெளிநாட்டவர்கள் உள்வாங்கப்படாமல் சவூதி அரேபியாவிற்குள் வசிப்பவர்கள் மாத்திரம் இக் கடமையை நிறைவேற்றுவதற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு உத்தியோகபூர்வமாக எமக்கு அறிவித்துள்ளதாக இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் நேற்று தெரிவித்தார்.

இம்முறை ஹஜ் கடமையை சவூதி அரேபியாவுக்குள் மட்டுப்படுத்தவும் வெளிநாடுகளிலிருந்து வருகின்ற ஹஜ்ஜாஜிகளுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதியளிக்காமல் இருப்பதற்கும் ஹஜ் அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் ஹஜ் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றவேளை, ஹஜ்  விவகாரங்களுக்குப் பொறுப்பான சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சர் தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இத்தகவலை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை ஹஜ் கடமையை சவூதி அரசு மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் சவூதி பிரஜைகள் மற்றும் அங்கு வாழ்கின்ற வெளிநாட்டவர்களுக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது . இக் காரணத்தினால், இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற முகவர்களுக்கு முற்பணம் செலுத்தியவர்கள் அவற்றை மீள பெற்றுக்கொள்ளுமாறு ஹஜ் குழுத் தலைவர் மர்ஜான் பளீல் மேலும் கேட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகள் யாவும் சவூதி அரேபிய அரசினால் அண்மையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் ஹஜ் குழு உறுப்பினர்களான அஹ்கம் உவைஸ், அப்துல் சத்தார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அஜ்வாத் பாஸி

Wed, 06/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை