தேர்தல் எப்போது? இன்று தெரியவரும்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிமுக்கிய கூட்டத்தில் இறுதி முடிவு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் எப்போது நடைபெறும் என நாடே எதிர்பார்க்கும் நிலையில் தேர்தல் திகதியை தீர்மானிக்கும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் அதிமுக்கிய கூட்டம் இன்று நடைபெறவிருக்கின்றது. 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையிலும் தேர்தல் தாமதப்படுத்தப்படுவதை ஆளும் தரப்பு கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலேயே ஆணைக்குழு இன்று அவசரமாக கூடுகிறது.  

மூன்று மாதங்களுக்கு மேலாக தாமதம் அடைந்து காணப்படும் பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை அறிவிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார். 

இன்றைய கூட்டத்தில் தேர்தலை நடத்துவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தக் கூடிய திகதி குறித்து முடிவு எட்டப்படவுள்ளதாகவும் அந்த முடிவுக்கு இணங்க உறுதியான திகதியை மாலையில் அறிவிக்க இருப்பதாகவும் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டிருக்கின்றார். 

இன்று இறுதி முடிவு எட்டப்பட்டதும் தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களுக்குரிய இலக்கங்களையும் அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலும் இன்று நள்ளிரவு வெளியிட தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்தார்  

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராகவும் தேர்தல் திகதி குறித்தும் இரண்டு அரசியல் கட்சிகளும் உட்பட சில சிவில் அமைப்புகளும் உச்ச நீதிமன்றில் 8 மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியிடப்படும் வரை தேர்தல் நடைபெறும் திகதியை அறிவிப்பதை தேர்தல் ஆணைக்குழு இடை நிறுத்துவதாக அறிவித்திருந்தது. 

அரசாங்கம் தேர்தலை தாமதப்படுத்தாமல் விரைவாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் சில எதிர்க்கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் தேர்தலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றதாலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததாலும் மூன்று மாதங்களுக்கு மேலாக தேர்தல் தாமதம் அடைந்துள்ளது.  

உச்ச நீதிமன்றம் கடந்த 2-ம் திகதியன்று தேர்தலுக்கு எதிராக 8 மனுக்களும் சட்ட வலுவற்றவை என அறிவித்து தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிப்பதற்காக ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் இன்று காலை கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் உறுதியான முடிவு எடுத்து தேர்தல் நடைபெறும் திகதியை அறிவிக்க இருப்பதாகவும் அதனை அடுத்து இன்று நள்ளிரவே அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட இருப்பதாகவும் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார். 

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் நடைபெறலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது.  

எம். ஏ. எம். நிலாம் 

Mon, 06/08/2020 - 11:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை