ஒருநாள் போட்டிகளில் சுப்பர் ஓவர் அவசியமில்லை – டெய்லர்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் ஓவரை வைத்து வெற்றியாளரை தீர்மானிப்பதை விட, இரண்டு அணிகளையும் வெற்றியாளர்களாக அறிவிப்பதில் எந்தவித தவறும் இல்லை என நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர் ரோஸ் டெய்லர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டி 100 ஓவர்களின் பின் சமனிலையாகிய போதும், சுப்பர் ஓவரும் சமநிலையில் நிறைவடைந்தது. எனினும், அதன் பின்னர் பௌண்டரி விதிமுறையின் படி இங்கிலாந்து கிண்ணத்தை சுவீகரித்தது.

இதனைத் தொடர்ந்து முக்கியமான போட்டிகளில் வெற்றியை தீர்மானிப்பதற்கு மேலதிகமாக சுப்பர் ஓவர்கள் வழங்கப்படும் என ஐசிசி புதிய விதிமுறையை அறிவித்திருந்தது. எனினும், இணை சம்பியன்களாக அறிவிப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என ரொஸ் டெய்லர் குறிப்பிட்டுள்ளார். “ஒருநாள் போட்டிகளில் சுப்பர் ஓவர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நீண்ட காலமாக விளையாடப்பட்டு வரும் நிலையில், அதில் சமனிலை போட்டி இருந்ததில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. ரி 20 போட்டிகளில் எப்போதும் இருப்பது போல், தொடர்ச்சியாக செல்ல முடியும். ஆனால், ஒருநாள் போட்டிகளில் சுப்பர் ஓவர் என்பது தேவையில்லாத ஒன்று. நான் நினைக்கிறேன் கூட்டு வெற்றியாளர்களை அறிவிப்பது சரியாக இருக்கும்.

கடந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் போது நான் நடுவரிடம் சென்று இதுவொரு நல்ல போட்டி என கூறினேன். ஆனால், குறித்த போட்டியில் சுப்பர் ஓவர் இருப்பதை நான் அறியவில்லை. நீங்கள் இந்த விடயத்தை பல வழிகளில் வாதம் செய்யலாம். ஆனால், 100 ஓவர்களில் ஒரு போட்டியை சமனிலையாக்க முடியுமானால், குறித்த போட்டியை சமனிலையாக அறிவிப்பதில் எந்த தவறும் இல்லை”

Mon, 06/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை