உலகில் கொரோனா தொற்று பத்து மில்லியனை எட்டியது

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று 10 மில்லியனை எட்டியது. இந்த வைரஸ் தொற்று ஆரம்பித்து ஏழு மாதங்களுக்குள் கிட்டத்தட்ட அரை மில்லியன் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஆண்டு தோறும் பதிவாகும் கடுமையான சளிக்காய்ச்சல் நோய் எண்ணிக்கையை விடவும் இரட்டிப்பான எண்ணிக்கையாக இது இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

நோய் பாதிப்புகளில் தலா 25 வீதமான சம்பவங்கள் வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பதிவாகி இருப்பதோடு ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் முறையே 11 மற்றும் 9 வீதமாகவும் பதிவாகி இருப்பதாக உத்தியோகபூர்வ சுகாதார தரவுகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கொவிட்–19 தொற்றினால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 497,000 இற்கு அதிகம் என்பதோடு இது ஆண்டுதோறும் கடுமையான சளிக்காய்ச்சலினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கைக்கு சமமாகும்.

முதலாவது கொரோனா வைரஸ் தொற்று சம்பவம் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி சீனாவின் வூஹான் நகரில் உறுதி செய்யப்பட்டதோடு பின்னர் அது ஐரோப்பாவிலும் தொடர்ந்து அமெரிக்காவிலும் தீவிரம் அடைந்தது. இதனை அடுத்து ரஷ்யாவில் நோய்ப் பாதிப்பு உச்சம் பெற்றது.

இந்த நோய்த் தொற்றானது தற்போது புதிய கட்டத்தை எட்டி இருப்பதோடு அதன் மையப்புள்ளிகளாக பிரேசில் மற்றும் இந்தியா மாறியுள்ளன. இந்த நாடுகளில் நாள்தோறும் 10,000க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

கடந்த வாரத்தில் உலகெங்கும் பதிவான நோய்த் தொற்றுச் சம்பவங்களில் முன்றில் இரண்டு இந்த இரண்டு நாடுகளிலும் இடம்பெற்றுள்ளன.

மறுபுறம் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்திய சீனா, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் கடந்த வாரமாகும்போது மீண்டும் சமூகத்தில் வைரஸ் பரவல் சம்பங்கள் பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

எனினும் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமாக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு கடந்த மே மாதத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்தபோதும் அண்மைய வாரங்களில் முன்னர் பாதிக்கப்படாத பகுதிகள் மற்றும் கிராமப் புறங்களில் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது.

Mon, 06/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை