எம்.சி.சி.; அரசின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை

அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றமில்லையென அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நேற்று முன்தினம் அது தொடர்பில் முழுமையான அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் உள்ளடக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்திய பின்பே அரசு அது தொடர்பான நடவடிக்கையை முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு எத்தகைய இலாபம் கிடைத்தாலும் அரசியலமைப்பிற்கு முரணானதும் நடைமுறை சட்டங்களுக்கு  முரணான எதையும் அரசாங்கம் மேற்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்; தற்போதைய அரசாங்கம் எந்த காரணத்திற்காகவும் அரசியலமைப்புக்கும் நாட்டின் சட்டங்களுக்கும் முரணான எத்தகைய செயற்பாட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை என்ற உறுதியான கொள்கையுடன் உள்ளது.

அந்த நிலையில் அதன் முழுமையான அறிக்கை பிரதமரிடம் நேற்றுமுன்தினம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராய்ந்து அதன் உள்ளடக்கம் மற்றும் அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் வெளியிட உள்ளது.

இவ்வாறும் இன்னும் மக்களுக்கு மறைவாக அரசாங்கம் எதையும் மேற்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்தார். (ஸ)

 

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை