Header Ads

அமெரிக்காவில் தொடர்ந்தும் பெரும் ஆர்ப்பாட்டங்கள்: வன்முறை தணிவு

பொலிஸ் காவலில் வைத்து ஆபிரிக்க அமெரிக்க இனத்தவரான ஜோர்ஜ் பிளொயிட் மரணத்த சம்பவத்திற்கு எதிராக எட்டாவது நாளாகவும் கடந்த செவ்வாய் இரவு ஆயிரக்கணக்கான மக்கள் பெரும்பாலும் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதில் பிளொயிட்டின் சொந்த ஊரான டெக்ஸாஸின் ஹெளஸ்டனில் இடம்பெற்ற மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் அவரது உறவினர்களும் பங்கேற்றனர்.

பல நகரங்களில் ஊரடங்கு மீறப்பட்டதோடு, சூறையாடல் சம்பவங்களும் பதிவாகி இருந்தன. மத்திய வொஷிங்டனில் இரவு நேர ஆர்ப்பட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

தலைநகரில் தொடர்ந்து இராணுவம் வீதிகளில் நிறுத்தப்பட்டிருப்பதோடு வெள்ளை மாளிகை நோக்கி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலால் ஹெலிகொப்டர்கள் வட்டமிட்டன.

பிளொயிட்டின் சம்பவம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் கறுப்பினத்தவர்களின் கொலைகள் மற்றும் இனவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை தூண்டியுள்ளது.

ப்ளொயிட்டை பொலிஸார் நடத்தில விதம் குறித்து மாத்திரமன்றி கறுப்பினத்தவர்கள் மீது பொலிஸார் பரந்த அளவில் மேற்கொண்டுவரும் கொடுமைகளுக்கு எதிராகவுமே ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

நியூயோர்க் மான்ஹட்டனில் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்ட இரவு நேர ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் போக்குவரத்துகள் முடக்கப்பட்டன.

லொஸ் ஏஞ்சல்ஸ், பிலடொல்பியா, அட்லாண்டா மற்றும் சியாட்டில் நகரங்களிலும் பாரிய பேரணிகள் இடம்பெற்றன. 46 வயதான ப்ளொயிட் உயிரிழந்த மினியாபொலிஸ் நகரில் ஒப்பீட்டளவில் அமைதி நிலவியது.

அட்லாண்டாவில் சென்டனியல் ஒலிம்பிக் பூங்காவுக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

60,000 வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள் பங்கேற்ற ஹெளஸ்டன் பேரணியில் ஜோர்ஜ் ப்ளொயிட்டின் பதினாறு குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில் அவரது சகோதரி லா டன்யா மற்றும் சகோதரர் பிளோனசும் இருந்தனர். “எனது மாமாவுக்காக எமக்கு நீதி கிடைக்கும் வரை நிறுத்த வேண்டாம்” என்று பிளொயிட்டின் மருமகன் ஒருவர் கூட்டத்தினரிடம் குறிப்பிட்டார்.

பிளொயிட் நல்ல மனிதர் என்று அவரது மனைவி ரொக்சி வொசிங்டன் மினியாபொலிஸில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

அவரது ஆறு வயது மகளுடன் அந்த செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற வொசிங்டன், “எனது குழந்தைக்காக, ஜோர்ஜிற்காக இங்கு வந்தேன். அவருக்காக எனக்கு நீதி வேண்டும்” என்றார்.

ஜோர்ஜ் ப்ளொயிட்டின் இறுதிச் சடங்கு வரும் ஜூன் 9 ஆம் திகதி ஹெளஸ்டனில் இடம்பெறவுள்ளது.

ஒரு காருக்கு அடியில் ஜோர்ஜ் பிளொயிட் கைவிலங்கிடப்பட்டிருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து பொலிஸார் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்தே ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

ஜோர்ஜ் ப்ளொயிட் கழுத்தின் மீது காலை வைத்து அழுத்தி கொன்றதாக, சாவின் என்ற பொலிஸார் மீது கொலை வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பிளொயிட் மரணத்திற்கு காரணமான நிகழ்வுகள் அனைத்தும் வெறும் 30 நிமிடங்களில் நடந்து முடிந்தன. இவை அனைத்தும் 20 டொலர் கள்ளநோட்டு விவகாரத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு கடையில் பிளொயிட் சிகரெட் வாங்கியபோது, அவர் கொடுத்த 20 டொலர் பணம் கள்ளநோட்டு என சந்தேகித்த கடைக்காரர், பொலிஸாருக்கு தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த பொலிஸார் ப்ளொயிட்டை கைது செய்யும்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Thu, 06/04/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.