ஹஜ் கடமையை கைவிட இதுவரை 6 நாடுகள் முடிவு

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு யாத்திரிகர்களை அனுப்புவதை இதுவரை 6 நாடுகள் நிறுத்தியுள்ளன.

சவூதி அரேபியாவில் புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 4,233 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் முஸ்லிம்களின் மிகப்பெரிய ஒன்றுகூடலான ஹஜ் கடமையை ரத்துச் செய்ய அல்லது அடையாளமாக நடத்துவதற்கு சவூதி அரேபியா தீர்மானிக்க வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

பிறை பார்ப்பதன் அடிப்படையிலான ஹஜ் கடைமை இம்முறை வரும் ஜூலை 28 மாலை ஆரம்பித்து ஓகஸ்ட் 2 இல் நிறைவடையும். வசதிபடைத்த முஸ்லிம்கள் புனித மக்காவுக்கு யாத்திரை செய்து ஹஜ் கடமையில் ஈடுபடுவது கட்டாயமாகும்.

எனினும் இதுவரை ஆறு நாடுகள் ஹஜ் கடமையை ரத்துச் செய்துள்ளன. இதில் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளான இந்தோனேசியா, மலேசியா மற்றும் புரூனெய் உடன் முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளும் ஹஜ் கடமையை கைவிட்டுள்ளன.

1932 இல் சவூதி உருவாக்கப்பட்டது தொடக்கம் ஹஜ் இரத்துச் செய்யப்பட்டதில்லை.

அரசியல், பொருளாதார மற்றும் சுகாதார காரணங்கள் ஹஜ் கடமைக்கு இடையூறாக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை