கராத்தே வீரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரனின் 6ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி

இலங்கை நாட்டிற்கு கராத்தே துறையில் பெருமை சேர்த்த அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அக்கரைப்பற்றில் (06) நடைபெற்றது.

இலங்கை கராத்தே சம்மேளனத்தின் இரண்டு முறை தலைவராகவும், ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் பிரதம போதனாசிரியராகவும், சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்து கராத்தே துறைக்கு பல்வேறு பணிகளை ஆற்றிய அன்னாரது ஞாபகார்த்த நிகழ்வு ஆறாவது வருடமாகவும் உணர்வுபூர்வமாக சமூக இடைவெளியுடன் கடைப்பிடிக்கப்பட்டது. ராம் கராத்தே டோ சங்கத்தின் ஸ்தாபகரும் பிரதம போதனாசிரியருமான சிகான் கே.கேந்திரமூர்த்தியின் ஒழுங்கமைப்பில் கிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.சங்கரலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவு கூரல் நிகழ்வில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். கிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் தலைவர் கே.சங்கரலிங்கத்தின் தலையுரையோடு ஆரம்பமான நினைவு கூரல் நிகழ்வில் இரு நிமிட இறைவணக்கம் அகவணக்கம் இடம்பெற்றது. பின்னர் அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரனின் உருவப்படத்திற்கு சிகான் கே.கேந்திரமூர்த்தியினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. முதல் சுடரினை சிகான் கே.கேந்திரமூர்த்தி ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய கராத்தே வீரர்களும் சுடரினை ஏற்றி வைத்ததுடன் மலரஞ்சலியும் செலுத்தினர். தொடர்ந்து அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் கராத்தே துறைக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஆற்றிய பணிகள் தொடர்பில் நினைவு கூர்ந்து பலர் உரையாற்றினர். இறுதியாக ராம் கராத்தே டோ சங்கத்தின் செயலாளர் சென்சி எம்.பி.செயினுலாப்தீனால் விம்மலுடன் விழி நீர் அஞ்சலி எனும் தலைப்பிலான அஞ்சலி கவிதையும் வாசிக்கப்பட்டது.

 

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை