ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு, அதற்கான உரிமத்தை பெற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தமது சம்மதத்தை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 13ஆம் திகதிக்குப் பிறகு எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை.

இதனால் அனைத்து கிரிக்கெட் சபைகளும் பல்வேறு வழிகளில் நஷ்டம் அடைந்தன. எப்படியாவது கிரிக்கெட் போட்டிகளை ஆரம்பிக்க வேண்டும் என அனைத்து அணிகளும் முயற்சி செய்து வந்தன.

இந்த நிலையில், அக்டோபர் மாதம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டு இருந்த ரி 20 உலகக் கிண்ண தொடர் நடைபெறாது என கூறப்படுகிறது.

எனவே உலகக் கிண்ணம் தொடர் நடைபெறாத பட்சத்தில், அதே காலப்பகுதியில் இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில், ரி 20 உலகக் கிண்ணத்துக்கு முன் ஆசியக் கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான உரிமத்தை பாகிஸ்தான் கடந்த 2018ஆம் ஆண்டு பெற்றிருந்தது.

எனினும், ஐக்கிய அரபு இராட்சியத்தில் கொரோனாவின் தாக்கம் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் வராத காரணத்தால் இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஆசிய கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

ஆசிய கிண்ணத்தை நடத்துவது குறித்து தீர்மானிக்க ஆசிய கிரிக்கெட் பேரவையின் விசேட கூட்டமொன்று கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, தற்போதுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைக் கருத்திற்கொண்டு ஆசிய கிண்ண ரி 20 தொடரை இலங்கையில் நடத்துவதற்கான சம்மதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது.

இதுதொடர்பில் இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா ஆங்கில பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “ஆசிய கிண்ணத்தை நடத்துவதற்கான உரிமத்தை பாகிஸ்தான் எமக்கு வழங்க சம்மதம் தெரிவித்தது. எனவே, குறித்த தொடரை நடத்துவது குறித்து நாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.

குறிப்பாக கொரோனா வைரஸுக்கு மத்தியில் இந்தத் தொடர் நடைபெறுவதால் சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்தார்.

முன்னதாக ஐ.பி.எல் போட்டிகளை நடத்துவதற்கு ஆசியக் கிண்ண போட்டி அட்டவணையை எக்காரணம் கொண்டும் மாற்றியமைக்க மாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்திருந்ததுடன், ஐ.சி.சியின் கூட்டத்திலும் ஐ.பி.எல் தொடருக்காக ரி 20 உலகக் கிண்ணத்தை ஒத்திவைக்கக் கூடாது என பாகிஸ்தான் உறுதியாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, ரி 20 உலகக் கிண்ணத்துக்குப் பதிலாக ஐ.பி.எல் தொடர் குறித்த காலப்பகுதியில் நடைபெற்றாலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கிண்ண ரி 20 தொடர் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை