கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி பூசை

கொக்கட்டிச்சோலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட கிளாக்கொடிச்சேனை கமநல அமைப்பினால் நேற்று (01) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி விசேட பூசை, ஆராதனை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வெப்பம் காரணமாக குளங்களில் நீர்வற்று ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்களும் நீர் இன்றி கருகும் நிலையை அடைந்துள்ளன. இதனால் விவசாய செய்கையினை அழியாது காப்பாற்றிக்கொள்ள இப்பூசை ஆராதனை மேற்கொள்ளப்பட்டது.

கிளாக்கொடிச்சேனை கமநல அமைப்பின் தலைவர் சி.அகிலேஸ்வரன் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற பூசை ஆராதனையில் நீர்ப்பாசன திணைக்கள தொழிநுட்ப உத்தியோகத்தர் சா.சிவநந்தி கலந்து கொண்டிருந்தார்.

புளுக்குணாவை குளத்தின் நீர்பாய்ச்சலினை நம்பி, 13 கண்டங்களில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வருடம் 2900 ஏக்கரில் சிறுபோக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

எனினும் 500ஏக்கருக்கு மேற்பட்ட நெற்காணியில் மேலதிகமாக வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாலும், அதிகவெப்பம் காரணமாகவும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டதாக , கிளாக்கொடிச்சேனை கமநல அமைப்பின் உபதலைவர் சி. அகிலேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அரசாங்க அதிபருடன் குறித்த அமைப்பினர் கலந்துரையாடல் ஒன்றினை அண்மையில் நடத்தியதாகவும், இதன்போது மத்திய நீர்ப்பாசன குளங்களில் இருந்து நீரினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டதாக கூறினார்.

இம்முயற்சியினை  மேற்கொள்ளும் மாவட்ட அரசாங்க அதிபருக்கும், மாகாண நீர்ப்பாசன பிரதி பணிப்பாளருக்கும், பட்டிருப்பு நீர்ப்பாசன திணைக்களத்தின் பொறியியலாளருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

கொக்கட்டிச்சோலை நிருபர் 

Sat, 05/02/2020 - 09:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை