கொரோனா வைரஸின் மையப் புள்ளியாக லத்தீன் அமெரிக்க பிராந்தியம் மாற்றம்

பிரேசிலில் நாளாந்த உயிரிழப்பு அமெரிக்காவை விஞ்சியது

லத்தீன் அமெரிக்காவில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்பு மோசமடையவிருக்கும் நிலையில் அந்த பிராந்தியம் வைரஸ் தொற்றின் புதிய மையப்புள்ளியாக மாறி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் தற்போது 700,000 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 33,000 பேர் வரையே உயிரிழந்துள்ளனர். எனினும் நகரங்களில் தோண்டப்படும் பாரிய புதைகுழிகள் பற்றிய செய்திகள் மற்றும் போதிய சோதனைகள் மேற்கொள்ளப்படாதது போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு வைரஸ் தொற்றின் பாதிப்பு கூறப்படுவதை விடவும் பல மடங்கு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

“கொவிட்-19 பெரும் தொற்றின் மையப் புள்ளியாக எமது பிராந்தியம் மாறியிருப்பது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று உலக சுகாதார அமைப்பின் பிராந்திய அலுவலகமான பான்-அமெரிக்க சுகாதார அமைப்பின் பணிப்பாளர் டொக்டர் கரிசா எட்டியென் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

“கட்டுப்பாடுகளை தளர்த்துவது அல்லது மூலோபாயங்கில் இருந்து பின்வாங்கும் நேரம் இதுவல்ல. தற்போது வலுவாக நின்று, தொடர்ந்து கண்காணிப்புடன் பொது சுகாதார நடவடிக்கைகளை வலுப்படுத்த கடுமையான செயற்பாடுகளை மேற்கொள்ளும் நேரம்” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி பிற்பகுதியிலேயே கொரோனா வைரஸ் தென் அமெரிக்க பிராந்தியத்தை அடைந்ததாக நம்பப்படுகிறது. அது தொடக்கம் அந்த வைரஸ் பிராந்தியம் எங்கும் வியாபித்து தற்போது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை விஞ்சி நாளாந்த நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மோசமான பொருளாதாரம் மற்றும் போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனைகளுக்கு மத்தியில் வைரஸ் தொற்று தீவிரம் அடையும் எச்சரிக்கைகள் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்தன. இதில் இந்த வைரஸ் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் ஏழு நாட்களுக்கு அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவான நாடாக பிரேசில் கடந்த வாரம் இடம்பெற்ற நிலையில் அந்த நாடு பற்றி உலக சுகாதார அமைப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

பெரு மற்றும் சிலி நாடுகளிலும் அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரு நாடுகளும் பிராந்தியத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அடங்குகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் இந்த நாடுகளில் நோய்த் தொற்று வீதம் அதிகமாக உள்ளது.

நோய்த் தொற்று ஏற்பட்டது தொடக்கம் சிலியில் 77,961 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு 806 பேர் உயிரிழந்துள்ளனர். இரு அமைச்சர்களுக்கும் வைரஸ் தொற்றி இருப்பது கடந்த திங்களன்று உறுதி செய்யப்பட்டது.

அதிக நோய்த் தொற்று உள்ள நாடுகள் வரிசையில் கடந்த வார இறுதியில் ரஷ்யாவை பின்தள்ளி அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்திற்கு பிரேசில் உயர்ந்தது. பிரேசிலில் 374,898 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பதோடு 23,473 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த புள்ளி விபரங்கள் எதிர்வரும் வாரங்களில் நிலைமை மோசமடைவதை காட்டுவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பிரேசிலில் ஜுன் பிற்பகுதியாகும்போது நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,020 ஆகவும், ஓகஸ்ட் 4 ஆம் திகதியாகும்போது மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 88,300 ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

எனினும் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ கொவிட்-19 தொற்று பற்றி தொடர்ந்தும் அலட்சியம் காட்டி வருகிறார். ஒரு சிறிய காய்ச்சலுக்கு அதிகம் கவலைப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

மாநில அரசுகளில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகளை சாடும் பிரேசில் ஜனாதிபதி முடக்க நிலை நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் என்று குறிப்பிடுகிறார்.

எவ்வாறாயினும் பிரேசிலில் கொவிட்-19 தொற்றினால் நாளாந்தம் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவை விஞ்சியது. அது உலகின் மோசமான எண்ணிக்கையாகவும் உருவெடுத்துள்ளது. இதனால் பிரேசிலில் இருந்து வரும் வெளிநாட்டினர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரேசிலில் கடந்த செவ்வாய்க்கிழமை முடிவடைந்த 24 மணி நேரத்தில் 1039 பேர் உயிரிழந்துள்ளனர். இது அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக இருந்தது. அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை 657 உயிரிழப்புச் சம்பவங்கள் பதிவாயின.

ஈக்வடோரிலும் தற்போது நிலைமை மோசமடைந்துள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக அரச நடவடிக்கைகளை எதிர்த்து ஈக்வடோர் மக்கள் கடந்த செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும் இரண்டாவது மிகப் பெரிய நகரான குவாயாகுயிலில் நூற்றுக்கணக்கான உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் இருப்பதும் அட்டைப்பெட்டியிலான சவப்பெட்டிகள் வீதியில் வரிசையாக நிற்கும் சம்பவங்கள் பதிவாயின.

மறுபுறம் வெனிசுவேலா மற்றொரு நெருக்கடி நிலையை நெருங்கி வருவதாக மனித உரிமை கண்காணிப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார, அரசியல் மற்றும் சுகாதார பிரச்சினை காரணமாக கொரோனா வைரஸை கையாள தயாரின்றி வெனிசுவேலா இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெனிசுவேலாவில் 1,100 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 10 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் வைரஸ் சோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில் அதன் பாதிப்பு குறைத்து மதிப்பிடப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஒப்பீட்டளவில் கொரோனா வைரஸ் தொற்றை கையாள்வதில் கியூபா சிறப்பாக செயற்படுவதாக சுகாதார அளவீடு மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. கியூபாவில் 1,963 நோய்த் தொற்று சம்பவங்களே பதிவாகி இருப்பதோடு 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனோ வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது மூன்றரை இலட்சத்தை தாண்டி இருப்பதோடு நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 5.7 மில்லியனாக உயர்ந்துள்ளது.

உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. அங்கு 100,625 பேர் உயிரிழந்திருப்பதோடு 17 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும் அந்நாட்டில் அண்மைய வாரங்கில் நோய்ப் பாதிப்பு தணிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 161 பேர் உயிரிழந்திருப்பதோடு மொத்த உயிரிழப்பு 3,968 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் மேலும் 8,338 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 370,680 ஆக அதிகரித்துள்ளது.

Thu, 05/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை