ஹொங்கொங்கில் தொடர்ந்து ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டம்

சீன தேசிய கீதத்தை அவமதிப்பதை குற்றமாக்கும் சட்டமூலம் ஹொங்கொங் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு அந்த நகர பொலிஸார் மிளகுப் பந்து குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.

பல இடங்களிலும் சிறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருப்பதோடு பல டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொங்கொங்கில் சீனாவுக்கு எதிரான கருத்துகள் அதிகரித்திருக்கும் சூழலிலேயே இந்த சட்டமூலம் நேற்று இரண்டாவது வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஒருசில நாட்களுக்கு முன்னதாக ஹொங்கொங்கில் சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டம் ஒன்றை சீனா பரிந்துரைத்திருந்தது.

இது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த சட்டமூலம் நகரில் சுதந்திரத்தை குறைக்கும் முயற்சி என்று அதனை விமர்சிப்பவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மறுபுறம் தேசியகீத சட்டமூலம் சட்டமாக அமுலுக்கு வந்தால், செயற்பாட்டாளர்களின் பேரணிகளில் சீனா தேசிய கீதம் அவமதிக்கப்பட்டால் 50,000 ஹொங்கொங் டொலர் அபராதம் மற்றும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

ஹொங்கொங்கிற்கு சொந்தமாக தேசிய கீதம் இல்லை என்பதோடு கால்பந்து போன்ற சில நிகழ்வுகளில் சீன தேசிய கீதமே இசைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று பல இடங்களிலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் 80 பேர் கைது செய்யப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Thu, 05/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை