பெருந்தோட்டப் பகுதிகளில் “அவுட் குரோவர்” முறையை பரவலாக்க முயற்சி

கொரொனா பரவியுள்ள சூழலிலும் தொடர்ந்து இயங்கும் பெருந்தோட்டத்துறையில் “அவுட்குரோவர்” முறைமையை உட்புகுத்த பெருந்தோட்டக் கம்பனிகள் சூட்சுமமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை தொழில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப்பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் கொரொனா முடக்க காலத்திலும் தொடர்ச்சியாக தொழிலை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் இந்த காலப்பகுதியில் பெருந்தோட்டப் பகுதியில் அவுட்குரோவர் முறையை அமுல்படுத்த தோட்ட நிர்வாகங்கள் முயற்சிப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடு தெரிவித்துவரும் நிலையிலேயே இந்த விடயம் குறித்து தொழில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக முன்னாள் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள விடயம் கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்குரியதாக இருந்துவந்த நிலையில் அவுட்குரோவர் முறையை நடைமுறைப்படுத்தி தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்ற முன்மொழிவினை கம்பனிகள் செய்து வந்துள்ளன. கூட்டு ஒப்பந்தத்தில் இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான சரத்துகளும் சேர்க்கப்பட்டிருந்தன.

நிலம் தொடர்பான எவ்வித உறுதியான உடன்பாடுகள் ஏதுமின்றி கூட்டு ஒப்பந்தத்தில் அந்த சரத்து உள்வாங்கப்பட்டமை தொடர்பில் நான் பலமுறை பாராளுமன்றத்திலும் பிரஸ்தாபித்து தொழில் அமைச்சு இது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்துள்ளேன்.

இந்த நிலையில் கொரொனா காலத்தில் சமூக இடைவெளியைப் பேணும் வகையில் குறிப்பிட்ட தேயிலை மரங்களை ஒதுக்கீடு செய்து தொழிலாளர்களை வேலை செய்யக்கோரும், அவுட்குரோவர் முறைமையை அமுல்படுத்த ஹொரண பிளாண்டேசன் முயற்சி மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா சாமிமலைப் பகுதி தொழிலாளர்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அவுட்குரோவர் முறை பின்பற்றப்படுவதால் தொழில் உரிமைகளான ஊழியர் சேமலாபநிதி, நம்பிக்கை நிதி, சேவைக்காலப்பணம் முதலான விடயங்களில் தொழில் சட்ட ஏற்பாடுகள் மீறப்படும் நிலைமை தோன்றும் என்பதை தொழில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தேன். இதனை எழுத்து மூல முறைப்பாடாக தொழில் அமைச்சர் கோரி உள்ள நிலையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக எழுத்து மூல கோரிக்கையை அனுப்ப முடிவு செய்து இருப்பதோடு குறிப்பிட்ட நடவடிக்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் தொழிலாளர் தேசிய சங்கம் தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

(நோட்டன் பிரிட்ஜ், தலவாக்கலை குறூப் நிருபர்கள்)

Thu, 05/14/2020 - 11:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை