கையாலாகாத தலைமைத்துவமே மலையகத்தின் சாபம்

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரொனா பரவலை ஒரு சிறிய நாடாக இலங்கை இயலுமானவரையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது பலரதும் பாராட்டைப் பெற்றுக் கொண்டுள்ளது. உலக வல்லரசான ஐக்கிய அமெரிக்காவில் அறுபதினாயிரம்  மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில் இலங்கையில் 10க்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது போற்றுதற்குரியது. இந்நிலையில் மலையகத்திற்கு 7000 இளைஞர், யுவதிகள் தப்பி வந்துவிட்டதாக பொறுப்பற்ற அமைச்சர் பேசியதும் அதற்கு வக்காளத்து வாங்கி அவர்களது சிஷ்யர்கள் இலங்கை சுகாதார மற்றும் பாதுகாப்புத்துறையை கையாலாகதவர்கள் என பேசுவதும் கண்டிக்கத்தக்கது. இத்தகைய கையாலாகாத தலைமைத்துவங்களே மலையகத்தின் சாபம் என தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தலைநகரில் இருந்து மலையகத்திற்கு 7000 இளைஞர், யுவதிகள் தப்பிவந்ததாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கூறிய கருத்து உண்மையானது என்றும், அதனைத் தடுக்கத் தவறிய பாதுகாப்புத் துறையும் சுகாதாரத் துறையும் கையாலாகதவர்கள் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் விடுத்திருக்கும் ஊடக அறிக்கைக்கு கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையிலேயே எம்.திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மலையகப் பெருந்தோட்டத்துறை மக்களுக்கு இலங்கை அரச சுகாதார முறைமை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என்பது அரசியல் சார்ந்த பிரச்சினை. அதனை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என நான் நீண்ட ஆய்வறிக்கை ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து உள்ளேன். அதனை அடுத்துவரும் மலையக உறுப்பினர்கள் முன்கொண்டு   சென்று நடைமுறை  சாத்தியமாக்க வேண்டும்.

அதேநேரம் இலங்கையின் பொது சுகாதாரம் முறைமை உயர்ந்த தரத்தில் பேணப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால்தான் உலகளாவிய கொரொனா பரவலை இலங்கையால் சிறப்பான முறையில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர் மருத்துவ அதிகாரிகளை பாராளுமன்ற மேற்பார்வைக் குழுவில் சந்தித்து கொரொனா தொடர்பில் கலந்துரையாடியபோது, மருத்துவர்கள் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களின் பாதுகாப்பு, குறித்தும் நாங்கள் கலந்துரையாடி ( ஜனவரி 30 ) இருந்தோம். அப்போது இத்தகைய பரவல் நோயை குணப்படுத்த எத்தனிக்கும் மருத்துவத்துறை சார்ந்தவர்களின் மனப்போராட்டங்கள் குறித்தும் நாங்கள் பேசியிருந்ததுடன் அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் குறித்தும் கூட கலந்துரையாடினோம். அவர்கள் தங்கள் உயிரையும் குடும்பங்களை பணயம் வைத்தே இந்த கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல இலங்கை பாதுகாப்புத்துறையினரும் தங்களது உயிரைப்பணயம் வைத்து இந்த கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால்தான் வெலிசெர கடற்படை முகாம் வீரர்களுக்கு அந்த தொற்று ஏற்பட்டு இப்போது அவர்களது குடும்பத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது. இது பெரும் வருத்தத்திற்கு உரியது. பாதுகாப்புத்துறை சார்ந்தவர்களும் மனிதர்களே. அவர்களது குடும்ப உறவுகள், உணர்வுகள் குறித்த புரிதல் பொதுமக்களுக்கு அவசியமாகிறது.

இந்த நிலையிலேயே மலையக இளைஞர், யுவதிகள் 7000 பேர் தப்பிவந்ததாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வெளியிட்ட கருத்து வதந்தி என பாதுகாப்புத்துறைசார்ந்த பேச்சாளர் ஒருவர் கூறியதை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த இலங்கையின் பாதுகாப்புத் துறையையும் சுகாதாரத் துறையையும் கையாலாகாதவர்கள் என கணபதி கனகராஜ் கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவரது தலைமையின் தடுமாற்றம் நிறைந்த புலம்பல் செய்தியை காப்பாற்றுவதற்காக நாட்டின் தலைவரும் முப்படைத் தளபதியுமான ஜனாதிபதியின் கீழ் இயங்கும் பாதுகாப்புத் தரப்பை கையாலாகதவர்கள் என கூறுவது, அவர் வாக்கு சேகரித்து வெற்றிபெறச் செய்த ஜனாதிபதியையே கையாலாகதவர்கள் என கூறுவதற்கு சமமானதாகும்.

தனது அமைச்சின் கிளைக்காரியாலய திறப்பு விழாவின்போது 7000 பேர் தப்பிவந்ததாக தான் கூறிய கருத்து தவறுதலானது என அந்தக் கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதன் ஊடாக இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து விடலாம். அதனை விடுத்து அந்த செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் இப்போது இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினரையும் சுகாதார துறையினரையும் கூட குற்றம் சாட்டுவது, ஆரம்பத்திலேயே நான் தெரிவித்தது போல பொறுப்பற்ற செயலாகும் என்றார்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)

Sat, 05/09/2020 - 11:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை