பிரதமர் மஹிந்த ஏற்பாடு செய்த முன்னாள் எம்.பிக்களுக்கான விசேட மாநாடு நாளை

ரணில் தலைமையில் ஐ.தே.க, சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு பங்கேற்பு

அமைச்சரவை முடிவுக்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய 225 பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நாளை திங்கட்கிழமை திட்டமிட்டபடி நடைபெறுமென அலரி மாளிகை வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. நாளை காலை 10 மணிக்கு அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விசேட மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் 225 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. இதற்கான அழைப்புக் கடிதங்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாக அனைத்து கட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த வாரத்தில் எதிர்க்கட்சித் தரப்புகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதமொன்றில் நாட்டின் இன்றைய  நிலைமையை ஆராய்வதற் காகவும், அவசரச்  செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும்  கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்திருந்தன. இதில் பிரதான எதிர்க்கட்சிகள் பலவும் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இக்  கடிதத்தை ஜனாதிபதி கடந்தவார அமைச்சரவைக்கு சமர்ப்பித்து ஆராயுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டிய அவசியமில்லை. பதிலாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரையும் அலரி மாளிகைக்கு அழைத்து நிலைமைகளை ஆராயலாமென தெரிவிக்கப்பட்டது. இதன் பிரகாரம் கலைக்கப்பட்ட பாராளுமன்றை கூட்டும் எண்ணம் தமக்குக் கிடையாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதிபட அறிவித்துவிட்டார்.

பிரதமரின் இந்த அழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள தீர்மானித்திருப்பதாகவும் அதன் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கலந்துரையாடலின்போது பாராளுமன்ற நியதிகளுக்கமைய எடுக்க வேண்டிய அம்சங்களை சுட்டிக்காட்டி பாராளுமன்றத்தை மீளக் கூட்டுவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்காக 225 பேரையும்  அழைக்க வேண்டியதில்லை.  சபையின் கோரத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் 20வீதமான உறுப்பினர்கள் வருகை தந்தால் போதுமானது எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அறிவித்துள்ளார். பெரும்பாலும்  கூட்டணியின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வரென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, இந்த அழைப்பை முற்றாக நிராகரித்திருக்கின்றது. அரசாங்கமும் பிரதமரும் இம்மாநாட்டை  கூட்டி ஊடக கண்காட்சியை நடத்த முற்படுவதாக சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்கள்.

ஐக்கிய மக்கள்  சக்தியுடன் இணைந்துள்ள ரவூப் ஹக்கீம்  தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி, ஹெல உறுமய கட்சியின் பாட்டலி சம்பிக்க  ரணவக்க உள்ளிட்ட எதிரணிகள் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளன.

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி)  பிரதமரின் அழைப்பை முற்றாக நிராகரித்துள்ளது. அக்கட்சி இதில் பங்கேற்பதில்லை என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும் திட்டமிட்டபடி இந்த மாநாடு நாளைய தினம் நடைபெறும் எனவும் இதன்போது நாட்டின் இன்றைய அரசியல் நெருக்கடி நிலை, கொரோனா வைரஸ் தாக்கம் உட்பட முக்கியமான பல விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படவிருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தல் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எம் ஏ எம் நிலாம்

Sun, 05/03/2020 - 09:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை