பிரதமரை த.தே.கூ. சந்தித்ததால் தமிழருக்கு நன்மை ஏற்பட்டு விடுமென்று எவரும் அஞ்சுகின்றனரா?

‘பிரதமரை நாம் சந்தித்தாலும் குற்றம், சந்திக்கா விட்டாலும் குற்றம் என்ற பாணியில் குற்றம் சாட்டுகின்ற குணவான்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள்’ என்று கூறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசன்.

பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொண்ட சந்திப்புப் பற்றி பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள்   முன்வைக்கப்பட்டு  வருகின்றன. இது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஸ்ரீநேசனை அவரது மட்டக்களப்பு இல்லத்தில் சந்தித்து இதுபற்றி வினவிய போது அவர் தினகரனுக்காக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 

“பிரதமரின் தீர்மானத்திற்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அலரி மாளிகையில் கடந்த 04.05.2020 அன்று சந்திப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தொலைபேசி மூலமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இப்படியான கூட்டமொன்றில் கலந்து கொள்வதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் கூடி விவாதித்தனர். பின்னர் பிரதமரை மக்கள் நலன் கருதிச் சந்திக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

அம்முடிவுக்கமைவாக, எமது கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 04.05.2020 மு.ப 10.30 மணியளவில் பிரதமருடனான சந்திப்பு நடைபெற்றது. இதைத் தவிர பிரதமருடனான மேலுமோர் சந்திப்பும் அன்றைய தினம் நடைபெற்றது” என்று ஸ்ரீநேசன் விபரித்தார்.

இவ்விரு சந்திப்புகளின் போது மக்கள் சார்பான பல்வேறு விடயங்கள் எம்மால் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டன. எழுத்து மூலமாகவும் எமது தலைவர்களால்  இவை தொடர்பான மகஜர் கையளிக்கப்பட்டது.

கலந்துரையாடலின் போது பின்வரும் விடயங்கள் பிரதமரிடம் சுட்டிக் காட்டப்பட்டன. இவ்விடயங்கள் எமது  மக்களின் கோரிக்கைகளாகவும் வேண்டுகோள்களாகவும் அமைந்திருந்தன.

1. அன்றாடம் உழைத்து தமது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும்  தினக்கூலிகளான ஏழை மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள், குறிப்பாக அவர்களுக்கான உலர் உணவுத் தேவை  பற்றிக் கூறப்பட்டது.

2. பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள்.

3. விசேட தேவையாளர்களின் பரிதாபகரமான நிலைமைகளும் தேவைகளும்.

4. தின உழைப்புக்காக வெளி மாவட்டங்களுக்குச் சென்றதன் பின்னர் வீடுகளுக்கு வர முடியாத நிலையில் உள்ள அவர்களும், அவர்களது குடும்பங்களும் அனுபவிக்கும் அவலங்கள்.

5.வெளிமாவட்ட கொரோனா  தொற்றாளர்களை அந்தந்ந மாவட்டங்களில் பராமரிக்காமல் ஏனைய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதால் அந்த மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் அபாயம்.

6.சிவில் நிருவாகச் செயற்பாடுகளின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பதும், இராணுவ நிருவாகச் செயற்பாடுகள் அதிகரித்து வருவதிலுமுள்ள பிரச்சினைகள்.

7. யுத்தகால மனோபாவத்தில் அல்லாமல் இக்கால சூழலுக்கு ஏற்ப இராணுவத்தினர் செயற்பட வேண்டும்.

8.தமிழ் அரசியல் கைதிகளின் அவல நிலை. பல்லாண்டு காலம் சிறைவாசம் அனுபவிப்பதால் அவர்களும் குடும்பங்களும் எதிர்நோக்கும் பல்வேறு வகையான நெருக்கடிகள். கைதிகள் விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம். 

இதன் போது கைதிகளின் விடுதலைக்குப் பிரதமர் சாதகமான முறையில் கருத்து வெளியிட்டார்.

 9.உள்ளுர் உற்பத்திகளை சந்தைப்படுத்த முடியாத நிலையில், உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பொருளாதாரக் கஷ்டங்கள்.

10. எமது நாட்டில் இருந்து பிறநாடுகளுக்குத் தொழில் நிமித்தம் சென்றவர்கள் நாடு திரும்ப முடியாமல் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள்.

11. நிவாரண நடவடிக்கையிலுள்ள குறைபாடுகள், தாமதங்கள் சீராக்கப்பட வேண்டும். மேலும் சமுர்த்தி நிவாரணத் தொகை இரட்டிப்பாக்கப்பட வேண்டும்.

12.சுகாதார சேவை குறைபாடுகள் களையப்பட வேண்டும்.

13.இந்த நாட்டிலுள்ள சகல மக்களும் சமத்துவமாகவும், சமவாய்ப்புடனும் வாழக் கூடிய வகையில், அதிகாரப் பகிர்வு மூலமாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். கடந்த காலத்தில் முன்னெடுத்த அரசியல் தீர்வு நடவடிக்கை தொடரப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும்.

14.மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் நீண்ட காலப் போராட்டத்திற்குரிய நியாயமான தீர்வு எட்டப்பட வேண்டும்.

15.அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்கான போக்குவரத்து சீராக்கப்பட வேண்டும்.

16.விவசாயிகள், மீனவர்கள், முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள், கூலி அடிப்படையிலான சாரதிகள், சிகை அலங்கார நிலையத்தவர்கள், சீவல் தொழிலாளர்கள், சலவையாளர்கள், மேசன் தொழிலாளர்கள், தச்சுத் தொழிலாளர்கள், அங்கவீனர்கள், நோயாளிகள், வயோதிபர்கள் எதிர்நோக்கும்   பிரச்சினைகள் மீது கரிசனை காட்டவேண்டும்.

17.மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளமையைத் தவிர்த்து எடுக்க வேண்டிய மாற்று நடவடிக்கைகள்.

மேற்படி விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ரெலோ கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் உட்பட ஏனைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டன.

 04.05.2020 திகதிய சந்திப்பு முதற் கட்டமாக அலரி மாளிகையிலும் அடுத்த கட்டமாக பிரதமரின் விஜயராம மாவத்தையிலுள்ள மக்கள் சந்திப்பு அலுவலகத்திலும் நடைபெற்றன.

முதலாவது சந்திப்பின் போது கொரோனா தொடர்பாக ஏற்பட்டுள்ள தாக்கங்கள், அதற்கான பதில் நடவடிக்கைகள் ஆராயப்பட்டன. பின்னர் எமது கட்சியுடனான தனிப்பட்ட சந்திப்பில் ஏனைய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

எமது கட்சியினருடனான பிரதமரின் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது பிரதமர் இச்சந்திப்பையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்”.

இவ்வாறு ஸ்ரீநேசன் குறிப்பிட்டார்.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எதற்கும் பிரதமர் எதிர்ப்புகள் தெரிவிக்காமல் சாதமான சமிக்ஞைகளை வெளியிட்டதுடன் ஒப்புதல் கருத்துக்களையும் வெளியிட்டார்.

இனிவரும் காலத்தில் பிரதமர் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் மூலமாகவே தமிழ் மக்களின் நல்லபிப்பிராயங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் நினைப்பதை எம்மால் உணரக் கூடிடயதாக இருந்தது. 

மாற்றாந் தாய் மனப்பாங்கான செயற்பாடுகள் ஒரு போதும் தேசிய ஐக்கியத்தினையோ, தேசியப் பிரச்சினைக்கான தீர்வினையோ, இனங்களுக்கிடையான சகிப்புத் தன்மையினையோ ஏற்படுத்தாது என்பதே இலங்கையின் கடந்த கால வரலாறாகும்.

இதனைப் பிரதமர் இதய சுத்தியுடன் உணர்ந்து கொண்டால் இந்நாட்டுப் பிரச்சினைகள் எளிதாகத் தீர்ந்து விடும். அந்த ஆளுமையை வெளிக்காட்டுகின்ற தலைவர்களே இந்நாட்டின் உண்மையான வரலாற்று நாயகர்களாக திகழ வாய்ப்புள்ளது. இதனை தற்போதைய அரசாங்கம் உணர்ந்து கொண்டால் நாட்டுக்கும்  மக்களுக்கும் நன்மைகளே விளையும்”. இவ்வாறு ஸ்ரீநேசன் குறிப்பிட்டார். 

“நாம் பிரதமரைச் சந்தித்தமை பற்றி பல புத்திஜீவிகளும், ஊடகவியலாளர்களும், ஆரோக்கியமான கருத்துகளை வெளியிட்டமைக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். அதேவேளை சந்தித்தாலும் குற்றம், சந்திக்காவிட்டாலும் குற்றம் என்ற பாணியில் குற்றம் சாட்டுகின்ற குணவான்கள் தங்களது சுயநலப்பாணியில், அரசியல் நோக்க அடிப்படையில் குற்றம் காணத் துடிக்கிறார்கள்.

நாங்கள் சந்திக்கச் செல்லாவிட்டால் சொல்லியிருப்பார்கள். நாங்கள் மக்கள் நலன்களில் அக்கறையற்றவர்கள் என்று கூறியிருப்பார்கள். சந்திக்கச் சென்றதால் ஏதும் நன்மைகள் தமிழ் மக்களுக்கு நடந்து விடுமோ என்று இப்படியானவர்கள் பயப்படுகின்றார்கள். இவர்கள் திருந்தவும் மாட்டார்கள், திருந்தாமைக்கு வருந்தவும் மாட்டார்கள். இவ்வேளையில் பகவத்கீதையின் ஞாபகந்தான் வருகின்றது.

‘எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது’.

இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீநேசன்.

எஸ்.எஸ்.தவபாலன் -  புளியந்தீவு குறூப் நிருபர்

Sat, 05/09/2020 - 14:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை