பொருளாதாரத்தை விரைவாக கட்டியெழுப்புவதில் ஜனாதிபதி உறுதியான நிலைப்பாடு

அதனாலேயே பசிலிடம் ஒப்படைப்பு

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேர்த்தியான வேலைத் திட்டத்தை வகுத்து அதன் பொறுப்புகளை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார்.

முடங்கிப் போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார். இவ்வருட இறுதிக்குள் 03 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கில் பொறுப்புகளை பசில் ராஜபக்ஷவிடம் கையளித்து வலியுறுத்தியுள்ளதாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.  ஸ்ரீலங்கா சுதந்திர பொது ஜன பெரமுனவின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

நாட்டின் பொருளாதாரம் கடந்த மூன்று மாதங்களுக்கிடையில் பாரிய பின்னடைவை கண்டுள்ளது. இதனை சரிசெய்ய மிகக் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. அதற்குச் கிரமமான திட்டம் வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தே ஜனாதிபதி பொருளாதார ஆய்வாளர்கள் உடன் ஆலோசனை நடத்தி புதிய வேலைத் திட்டத்தை வகுத்துள்ளார். நாட்டை புத்தெழுச்சியின் பக்கம் முன்னெடுத்துச்  செல்லப்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

பொருளாதாரத்தை புனரமைப்பு செய்யும் பணிகளுக்கு  முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கூடுமானவரை எமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எமது  ஆடை உற்பத்திக்கான சந்தை வாய்ப்புள்ளது அதனை கட்டியெழுப்ப உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன் சுற்றுலாத்துறையையும்  ஊக்குவிக்க முனைப்பு காட்ட வேண்டும். என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சியை 03 சதவீதமாக அதிகரிக்கும் இலக்குடன் பணிகள் வேகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதற்கான முழுப்பொறுப்பையும் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அனாவசியமான இறக்குமதி கட்டுப்படுத்தி எமது உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்து உலகச் சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க துரிதமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த மூன்று சதவீத வளர்ச்சியை அடைய முடியும் என்பதை என்ற நம்பிக்கையை ஜனாதிபதி வெளிப்படுத்தி உள்ளார் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எம் ஏ எம் நிலாம்

Sat, 05/16/2020 - 07:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை