ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் நால்வருக்கு கொரோனா

ஒலுவில் துறைமுகத்தின் ஒருபகுதியில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளதென அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

ஜா-எல சுதுவெல பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் இத்தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இத்தனிமைப்படுத்தல் நிலையத்தில் மொத்தமாக 85 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், இவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது அவர்களுள் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்றிருப்பது அடையாளம் காணப்பட்டது. இவர்கள் சிலாபம், இரனவில கொரோனா சிகிச்சை நிலையம் உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை இத் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 52 பேரினதும், இங்கு கடமையாற்றி வரும் கடற்படை உத்தியோகத்தர்கள் 20 பேரினதும் மாதிரிகள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இம்மருத்துவ பரிசோதனை முடிவிற்கமைவாக இவர்களுள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உள்ளதென நேற்றுமுன்தினம்(30) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பீ.சி.ஆர் பரிசோதனை முடிவிற்கு அமைவாக, இந்நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஜாஎல பிரதேசத்தினைச் சேர்ந்த நால்வருக்கே கொரோனா தொற்று உள்ளதென அடையாளம் காணப்பட்டுள்ளனர். பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கடற்படை உத்தியோகத்தர்கள் எவரும் கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் என அடையாளம் காணப்பட்ட நால்வரும் நேற்றுமுன்தினம்(30) மாலை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

Sat, 05/02/2020 - 08:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை