கலைக்கப்பட்ட பாராளுமன்றதை கூட்டுவதற்குச் சாத்தியமில்லை

நாட்டில் ஏற்றப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையிலிருந்து மீண்டெழ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

பல விசேட செயலணிகள் மூலம் நோய்த்தாக்கத்தின் பரவல் ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சில தரப்பினர் இச்செயற்பாடுகளையும் விமர்சித்த வண்ணமே உள்ளனர். அண்மை காலமாக கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு கேட்கின்றனர்.

ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரத்தின் போதே ஒரு புதிய பாராளுமன்றத்தை நிறுவி அதனூடாகவே நாட்டிற்கு சேவையை வழங்குவதாக உறுதி அளித்தே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். அதனை ஏற்றே மக்கள் பதின்மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளால் பெருவாரியாக அவரை வெற்றி பெறச்செய்தனர்.

சுகாதார துறை, முப்படை, பொலிஸ் மற்றும் அரச பணியாளர்கள் என அனைவரும் மக்களின் நலன் கருதி துரிதகதியில் செயற்பட்டுவருகின்றனர். அதுமட்டுமல்லாது வெளிநாடுகள், சர்வதேச நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள். இளைஞர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள். மக்கள் பிரதிநிதிகள் என பலரும் மக்களுக்கு பல்வேறுவிதமான நிவாரணங்களை அளித்து வருகின்றனர்.

அரசாங்கம் இதுவரையில் சமுர்தி, முதியோர்க்கான கொடுப்பனவு மற்றும் குடும்பங்களுக்கான கொடுப்பனவு என ஏறக்குறைய எழுபத்து இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு நிவாரணமாக 5000 ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. இதில் காணப்பட்ட சில குறைபாடுகளுக்கும் உடன் தீர்வுகளும் வழங்கபடுகின்றன.

இவ்வாறான சிறப்பான நிர்வாகத்தின் இடையே சில தரப்பினர் கலைத்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறும் அதற்கு சில அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். இது எவ்வாறு நடைமுறைக்கு சாத்தியமாகும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

(ஹற்றன் சுழற்சி நிருபர்)

Fri, 05/01/2020 - 13:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை