பல்வேறு பகுதிகளில் சிக்கியிருந்த 86 பேர் மட்டக்களப்புக்கு அனுப்பி வைப்பு

சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பப்பட்டனர்

கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் சிக்கியிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட86 பேர் நேற்று சொந்த இடங்களுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மருத்துவத் தேவை மற்றும் தொழில் நிமித்தம் காரணமாக ஜாஎல, வத்தளை, மாபோல, வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டி போன்ற பகுதிகளில் சிக்கியிருந்த இவர்களை இரண்டு பஸ்களில் அழைத்து வந்ததாக   மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

கொழும்பிற்குச் சென்ற இவர்கள் கொரோனா தடுப்பு ஊரடங்குச்சட்டம் காரணமாக சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் பல்வேறு இன்னல்களுடன் சிக்கியிருந்ததாக தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, கல்குடா, ஏறாவூர், வவுணதீவு, ஆயித்தியமலை, கரடியனாறு, காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடி ஆகிய பொலிஸ் பிரிவில் வசிக்கும் இவர்கள் பொலிஸ் நிலையத்தில் விபரங்களைப் பதிவுசெய்த பின்னர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

தம்மை சொந்த இடங்களுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனுக்கு இவர்கள் தமது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.

இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிக்கியுள்ள பொதுமக்களை சொந்த இடங்களுக்கு அழைத்து வருவதற்கு உதவி செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நன்றி தெரிவித்தார்.

ஏறாவூர் நிருபர்

Sat, 05/09/2020 - 10:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை