சுகாதார துறையினருக்கான பாதுகாப்பு அங்கிகள் உள்ளூரிலேயே தயாரிப்பு

கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் உயர்ந்த பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சுகாதார துறையினருக்கு உதவும் வகையில் தனிநபர்களும் தனியார் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கமைவாக அம்பாரை மாவட்ட சிவில் சமூக பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் இரா.விக்னேஸ்வரனின் முயற்சியின் பயனாக சுகாதார துறையினருக்கான தனிநபர் பாதுகாப்பு அங்கிகளை உள்ளுரில் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனின் வேண்டுகோளுக்கமைய வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்களை பாதுகாக்கும் வகையில் குறித்த தனிநபர் பாதுகாப்பு அங்கிகள் தயாரிக்கப்பட்டு வருவதுடன் சில தொகுதி அங்கிகள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணனிடம் அண்மையில் கையளிக்கப்பட்டும் உள்ளன.

உள்ளுரில் தயாரிக்கப்பட்டு வருகின்ற அங்கிகளுக்கான பொருத்தமான துணியை மாவட்ட சிவில் சமூக பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் பெற்றுக்கொடுத்துள்ளதுடன் அங்கியை முற்றும் முழுதாக இலவசமாக தைத்து கொடுக்கும் அரும்பணியை அக்கரைப்பற்றைச் சேர்ந்த விமல் ரெயிலர் நிலையத்தின் உரிமையாளர் தலைமையிலான குழுவினர் ஏற்று செயற்பட்டு வருகின்றனர்.

இ.விமலராசன், இ.செகநாதன், த.சுதர்சன், பா.மதியழகன் ஆகிய ரெயிலர்கள் இப்பணியை முன்னெடுத்து வருவதுடன் பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டுவரும் குறித்த அங்கியை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் டொக்டர் ரெமன்ஸ் உள்ளிட்டவர்களும் பார்வையிட்டனர்.

இதேநேரம் குறித்த இ.விமலராசன் தலைமையிலான குழுவினர் வித்தியாசமான பாதுகாப்பான முகக்கவங்களை தயாரித்துள்ளதுடன் விரைவில் குறித்த தனிநபர் பாதுகாப்பு அங்கிகளையும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.

பொருத்தமான நேரத்தில் பொருத்தமான சமூக பணியை முன்னெடுத்துவரும் அம்பாரை மாவட்ட சிவில் சமூக பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் மற்றும் விமல் ரெயிலர் உள்ளிட்டவர்களுக்கும் சுகாதார துறையினரும் பொதுமக்களும் நன்றி தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாச்சிக்குடா விஷேட நிருபர் 

Sat, 05/09/2020 - 10:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை