பயன்தரு மரங்கள், தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானை

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானைகள் மரங்களை அழிப்பதால் மக்கள் பெரும் இழப்புக்களைச் சந்தித்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு வீரபுரம் மற்றும் சின்னத்தம்பனை கிராமங்களுக்குள் புகுந்த யானை மக்கள் குடிமனைப் பகுதியில் இருந்த பயன்தரு மரங்களை சேதப்படுத்தியதுடன் தோட்டச் செய்கைகளையும் துவம்சம் செய்துள்ளது.

வீட்டு வளவினுள் காணப்பட்ட பலா மரங்களில் பழங்களை வீழ்த்தி சேதப்படுத்தியதுடன் விளாமரங்களில் உள்ள பழங்களையும் கீழே வீழ்த்தியுள்ளது.

அத்துடன் அண்மைக் காலமாக வீட்டுத்தோட்ட செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களத்தால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வரும் நிலையில் அத்திட்டத்தினை மேற்கொண்டவர்களது தோட்டங்களையும் அதிகளவில் சேதப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வாழ்வாதார பயிர்களாக காணப்பட்ட கச்சான் பயிர்களை யானை சேதப்படுத்தியுள்ளமையால் அப்பகுதி மக்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். இதேவேளை கிராமவாசியொருவரை துரத்திய யானை அவரது வீட்டினை சேதப்படுத்தியுள்ளது.

எனவே தொடர்ச்சியாக யானையின் அச்சுறுத்தலுக்குள் வாழும் தமக்கு உடனடியாக பாதுகாப்பை வழங்குவதுடன் தமது ஜீவனோபாய செய்கையான தோட்டச் செய்கைக்கும் பாதுகாப்பு தரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

வவுனியா நிருபர்

 

Fri, 05/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை