உலக சுகாதார அமைப்பு 157 மில். பெறுமதியான உபகரணங்கள் நன்கொடை

நாட்டில் கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக உலக சுகாதார அமைப்பு 157 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சுகாதார அமைச்சினூடாக மேற்கொண்டுவரும் செயற்திட்டங்களை பலப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு மேற்படி உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

அதற்கிணங்க 151 மில்லியனுக்கும் அதிகமான பெருமதியுடைய அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள், சுகாதார பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு உபகரணங்களையும் மேற்படி அமைப்பு அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டொக்டர் ராசியா பெண்டசே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் மேற்படி உபகரணங்களை கையளித்துள்ளார்.

நேற்று முன்தினம் அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டுள்ள மேற்படி உபகரணங்களை மருத்துவ வழங்கல் பிரிவு, தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களுக்கு பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒஸ்ட்க்ரோ இன்டர்நேஷனல் குரூப் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷெட்ரிக் அந்தனி 500 தனிப்பட்ட பாதுகாப்பு உடைகள் தொகுதிகளை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளித்தார்.

அந்த பாதுகாப்பு உடைகள் தொகுதிகளில் 200 தொகுதிகள் அங்கொட தொற்றுநோய் விஞ்ஞான நிறுவனத்திற்கும் 100 தொகுதிகள் குருநாகல் பெரியாஸ்பத்திரிக்கும் மேலும் 150 தொகுதிகள் தேசிய வைத்தியசாலைக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்படி நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரவி நாணயக்கார,தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் குமார விக்கிரமசிங்க, சுகாதார அமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் காஞ்சன ஜயரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 05/08/2020 - 09:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை