நிர்ணய விலைகளில் பொருட்கள் கிடைக்கவில்லை

அத்தியவசிய பொருட்கள் விலை அதிகரிப்புக்கு காரணம் கூறுகிறது யாழ்.வணிகர் கழகம்

யாழ்ப்பாணத்தில் நியாயமான விலைகளிலேயே பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள வர்த்தகர்கள் சில அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிப்பதற்கான காரணத்தை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

யாழ் வணிகர்கழகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலையே வர்த்தகர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

மேலும் கூறுகையில்,

கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு இறக்குமதிப் பொருட்களும் இறக்கப்படுவது இல்லை. உற்பத்திப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுவது இல்லை. கொழும்பிலிருந்து தான் பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றோம். அங்குள்ள விலைகளின் அடிப்படையில் தான் நாமும் பொருட்களை  விற்பனை செய்கின்றோம்.

யாழ்ப்பாணத்தில் மாத்திரம் விலை அதிகரிப்பு நடக்கவில்லை. விலை நிர்ணயம் இருந்தாலும் அந்த விலைகளுக்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாமல் உள்ளது. அவ்வாறு அதிகரித்த விலையில் கொள்வனவு செய்து அதற்கான செலவையும் கழித்து தான் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

ஆக யாழ்ப்பாணத்தில் மட்டும் பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை. கொழும்பு உட்பட பல இடங்களிலும் தற்போது பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அதற்கமையவே நாங்களும் அந்தப் பொருட்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்ய வேண்டியிருக்கின்றது. அதற்காக அதிக இலாபத்திற்கு நாங்கள் பொருட்களை விற்பனை செய்யவில்லை.

நியாயமான விலையில் நியதியின் அடிப்படையில் தான் செயற்பட்டு வருகின்றோம்.

அதே நேரத்தில் சில பொருட்களுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. அதற்கு காரணம் அந்தப் பொருட்கள் உற்பத்தி இல்லை.

இருப்பில் இருந்த பொருட்களிலும் பெரும்பாலானவை முடிவடைந்ததால் தான் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. மற்றப்படி ஏனைய பல பொருட்களும் தொடர்ந்தும் கொள்வனவு செய்து விற்பனை செய்யப்படுகிறது.

ஆகவே ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள நிலைமையை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்களை வர்த்தகர்கள் பதுக்கவில்லை. அதேநேரம் அதிக விலைக்கும் விற்கவில்லை. பல்வேறு இடர்களுக்கு மத்தியில் தான் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். 

பருத்தித்துறை விசேட நிருபர்

Wed, 04/08/2020 - 07:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை