கிளிநொச்சியில் பயிர்ச் செய்கைக்கு நீர் வழங்காமையால் அமைதியின்மை

கிளிநொச்சியில் சிறுபோகச் செய்கைக்கான நீர் விநியோகம் மேற்கொள்ளப்படாமையினால் அப் பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. எனினும் பொலிஸாரின் தலையீட்டையடுத்து தற்காலிக தீர்வு வழங்கப்பட்டதை தொடர்ந்து முடிவுகொண்டுவரப்பட்டது.

இச் சம்பவம் நேற்று இரணைமடு குளத்தின் கீழுள்ள பெரிய பரந்தன் பகுதியில் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இரணைமடுக் குளத்தின் கீழுள்ள பெரிய பரந்தன் பகுதியில் இம்முறை சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் யாழ்மாவட்டத்தில் உள்ள ஆலய  நிர்வாகம் ஒன்றுக்கு சொந்தமான சுமார் 80 ஏக்கர் காணியில் குத்தகைக்கு பயிர்ச் செய்கை செய்துவரும் 15 வரையான விவசாயிகளுக்கு அப் பகுதி கமக்கார அமைப்பு கடந்த சனிக்கிழமை முதல் நீர் விநியோகம் செய்யமறுத்தது. அத்துடன் குறித்த காணிக்குரிய வாய்க்காலை நிரந்தரமாக மூடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டபோது விவசாயிகளுக்கும் கமக்கார அமைப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் உரிய திணைக்கள அதிகாரிகளின் அனுமதியின்றியும், அதிகாரியின்றியும் மேற்கொள்ளப்பட்ட கமக்கார அமைப்பின் செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கை செய்தனர். அத்துடன் இன்று சம்பந்தப்பட்ட தரப்பினரை பொலிஸ் நிலையத்திற்கு சமுகமளிக்குமாறு கூறிவிட்டு சென்றனர்.

பரந்தன் குறூப் நிருபர் 

Wed, 04/08/2020 - 06:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை