தென் கிழக்காசிய நாடுகளில் தாதியர், மருத்துவ மாதுகள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்

உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

தென் கிழக்காசிய நாடுகள் 2030 இல் சுகாதார இலக்கை அடைவதற்கு தாதியர் மற்றும் மருத்துவ மாதுகளின் எண்ணிக்கை 1.9 மில்லியனாக விஸ்தரிக்கப்பட வேண்டுமென உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

அனைவருக்கும் தரமான சுகாதார சேவையை தாதியர் மற்றும் மருத்துவமாதுகளால் மட்டுமே வழங்க முடியும் என்பதால் அவர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதை அனைத்து தென் கிழக்காசிய நாடுகளும் உறுதி செய்ய வேண்டுமென்றும் உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்காசிய பிராந்தியப் பணிப்பாளர் டொக்டர். பூனம் சிங் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நேற்று அவர் விடுத்துள்ளஅறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

'தாதியர் மற்றும் மருத்துவமாதுகள் தொழிலாளர்களை பலப்படுத்துதல் மற்றும் ஆதரவு வழங்குதல்,' எனும் தொனிப்பொருளில் நேற்று முன்தினம் உலக சுகாதார தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது-

உலக சுகாதார அமைப்பு தாதியர் மற்றும் மருத்துவ மாதுகளின் எண்ணிக்ைகயை அதிகரிக்குமாறு 2015 ஆம் ஆண்டிலேயே அறிவித்திருந்தது. இதற்கமைய பிராந்தியத்தில் இவர்களின்  எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தாலும் மேலும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

தற்போது தென்கிழக்காசிய பிராந்தியத்தின் 10 ஆயிரம் பேருக்கு 37 தாதியர்களே உள்ளனர்.10 ஆயிரம் பேருக்கு ஆகக்குறைந்தது 40 தாதியர்களாவது தேவை. அதனால் 2030 இல் ஒட்டுமொத்த பிராந்தியத்திலுமுள்ள தாதியர் மற்றும் மருத்துவமாதுகளின் எண்ணிக்கை 1.9 மில்லியனிலும் அதிகரிக்கப்பட வேண்டும்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு முதன்முறையாக நேற்று உலக தாதியர் அறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தாதியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, தாதியர்களின்  கல்வி தரத்தை மேம்படுத்துவது, பின்தங்கிய மற்றும் ஒதுக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அவர்களது சேவையை பெற்றுக்கொடுப்பது உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

'கொவிட்-19' தொற்று தாதியர்களின் சேவையை எமக்கு எடுத்துக் காட்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் உலக சுகாதார அமைப்பு தாதியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Thu, 04/09/2020 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை